

தென் சீனக் கடல் தீவுகளில் ராணுவ தளங்களை அமைப்போம் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார்.
வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த தென் சீனக் கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்தப் பகுதியை பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
இதனிடையே தென் சீனக் கடலின் 7 இடங்களில் சீன அரசு செயற்கைக் தீவுகளை அமைத்து விமான தளங்களையும் அமைத் துள்ளது. அதே பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தீவுகளை பிலிப்பைன்ஸ் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதுதொடர்பாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, தலைநகர் மணிலாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தென்சீனக் கடலில் அமைந் துள்ள தீவுகளை அபகரிக்க எல் லோருமே போட்டி போடுகின்றனர். எனவே எங்களுக்குச் சொந்தமான தீவுகளில் விரைவில் ராணுவ வீரர்கள் முகாமிடுவார்கள். வரும் ஜூன் 12-ம் தேதி பிலிப்பைன்ஸ் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அப்போது திட்டு தீவில் பிலிப்பைன்ஸ் தேசியக் கொடியை ஏற்றுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தென் சீனக் கடலில் உள்ள திட்டு தீவு, சீனா அமைத்துள்ள செயற்கை தீவுகளுக்கு மிக அருகில் உள்ளது. அங்கு பிலிப்பைன்ஸ் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று ரோட்ரிகோ அறிவித்திருப்பது சீனாவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ பதவியேற்றார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவுடனான உறவை முறித்துக்கொண்டு சீனாவின் பக்கம் சாய்ந்தார். இந்நிலையில் திடீரென அவர் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளார். இதனால் தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.