

அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு உலகத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட விவரத்தை ஸ்னோடென் வெளியிட்டதால், வெளிநாட்டிலிருந்து கிடைத்து வந்த உளவுத் தகவல்களும், உளவு ஆதாரங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத்தில், தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கிளாப் பர் கூறியதாவது:
உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் நாம் செய்தவற்றை ஸ்னோடென் வெளிப்படுத்தியதன் விளைவு, வெளிநாட்டு புலனாய்வு ஆதாரங்களை அமெரிக்கா இழந்திருக்கிறது. கூட்டாளிகளின் புலனாய்வு ஒத்துழைப்பையும் இழந்திருக்கிறோம்.
பயங்கரவாதிகளும் அமெரிக்கா வுக்கு எதிரானவர்களும் அமெரிக் காவின் புலனாய்வு முறைகள், ஒற்றறியும் முறைகளை அறிந்து கொண்டிருப்பதால், நமது புலனாய்வுப் பணி மிகவும் கடினமாகி விட்டது. ஸ்னோடெனிடம் உள்ள இன்னும் வெளிப்படுத்தப்படாத ஆவணங்கள் திரும்பப் பெறப்ப டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். அவை வெளியானால் அமெரிக்காவின் பாதுகாப்பு மேலும் பலவீனமடை யும். எனது 50 ஆண்டுகால புலனாய் வுப் பணி அனுபவத்தில், ரஷிய புலனாய்வுத் துறை தற்போது மிகவும் ஆக்ரோஷமாகவும், மிகத் தகுதிவாய்ந்ததாகவும் உள்ளது. ஸ்னோடெனிடம் இருந்து சில ஆவணங்களைப் பெற்றிருப்பது தான் அதற்குக் காரணம் என நினைக்கிறேன்.
அமெரிக்கப் புலனாய்வு ரகசியங்களை வெளிப்படுத்தவும், ஸ்னோடெனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ரஷ்யா இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கிங் கூறுகையில், “ஊடகங்கள் ஸ்னோடெனை பிரபலப்படுத்த முயற்சி செய்கின்றன. அவர் தேசத்தை விற்பனை செய்தவர், அமெரிக்கர்களை அபாயத்தில் தள்ளியவரும் கூட” என்றார்
ராணுவ புலனாய்வு துறை இயக்குநர் மைக்கேல் பிளைன் கூறுகையில், “ஸ்னோடென் ரஷியாவின் செல்வாக்கின் கீழ் இருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
ஜெர்மன் முன்னாள் பிரதமரை வேவு பார்த்த அமெரிக்கா
ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கலை மட்டும் அமெரிக்க தேசிய புலனாய்வு மையம் கண்காணிக்கவில்லை, அவருக்கு முந்தைய பிரதமரான ஜெரார்டு ஸ்குரோடெரையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணித்து வந்துள்ளது. ஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா திட்டமிட்டதை ஜெரார்டு எதிர்த்தார். இதையடுத்து, அவரின் தொலைபேசி உரையாடல்களையும் அமெரிக்கா உளவறிந்து வந்துள்ளது என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.