Last Updated : 14 Jul, 2016 10:49 AM

 

Published : 14 Jul 2016 10:49 AM
Last Updated : 14 Jul 2016 10:49 AM

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது: தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனா மிரட்டல் பேச்சு

சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது. தென்சீனக் கடல் பகுதியில் விமானப்படைத் தளம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபடுவதற்கு முழு உரிமை உள்ளது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே ஆகிய நாடு களுக்கும் இடையே மோதல் நீடிக் கிறது. பிலிப்பைன்ஸ் அருகே ஸ்பார்ட்லி பகுதியில் 12 தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகள் மற்றும் 35 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கடல் பகுதியை சீனா தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ளது. இதை எதிர்த்து நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப் பாயத்தில் பிலிப்பைன்ஸ் வழக்கு தொடர்ந்தது.

மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் சர்வதேச தீர்ப் பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கு உரிமை இல்லை என்றும் அந்தப் பகுதி பிலிப்பைன்ஸுக்கு சொந்தமானது என்றும் தெரிவித் தது. வழக்கு விசாரணையை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த சீனா இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன ராணுவ வெளி யுறவுத் துறை இணையமைச்சர் லியூ ஜென்மின் கூறியதாவது:

சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கு இருக்கும் உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது. எந்த நேரத்திலும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து கடற்படையை இயங்குவோம். ஏனெனில் அப்பகுதி சீனாவுக்கு தான் சொந்தமானது. சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பு என்பது வெறும் வெள்ளை காகிதத் தில் நிரப்பப்பட்ட எழுத்துக்கள் தான். அது எங்களை கட்டுப்படுத் தாது. தீர்ப்பு நகலை குப்பையில் தான் போட வேண்டும். பிரச் சினைக்கு தீர்வு காண அனை வரும் பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும். சர்வதேச தீர்ப் பாயத்தில் வழக்கு விசாரணை நியாயமாக நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பதற்றம் ஏற்படுத்திய தைவான்

இதற்கிடையில் தனது கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக தைவான் தென்சீனக் கடல் பகுதியில் போர் கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு, ‘பிலிப்பைன்ஸுக்கு மட்டுமே தென்சீனக் கடல் சொந்தமானது என சர்வதேச நீதிமன்றம் (தீர்ப்பாயம்) அளித்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. சட்ட ரீதியாகவும் இந்த தீர்ப்பு எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. ஏனெனில் வழக்கு விசாரணைக்கு எங்களை அழைக்கவில்லை’ என தெரிவித்துள்ளது. மேலும் தைவானின் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தென் சீனக் கடல் பகுதியில் தைவானுக்கு உள்ள உரிமை மற்றும் இறை யாண்மையை காக்க அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவோம். இதற்காக போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பி வைப்போம்’ என கூறப் பட்டுள்ளது.

வளர்ச்சிக்கு ஆபத்து

தென்சீனக் கடல் பகுதியின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளமை மற்றும் வளர்ச்சி ஆகியவை இனி ஆபத்துக்குள்ளாகும் என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் அடிப்படையில் சுதந்திரமான கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து, தடையில்லா வர்த்தகம் ஆகியவற்றுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும். இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சினையை அமைதி வழியில் தீர்ப்பது என்றால் மிரட்டலோ, ஆளுமையோ செலுத்தக் கூடாது. இதில் மாறுபட்டு நின்றால் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை வெகுவாக பாதிக்கும். எனவே சுதந்திரமான கடல் வழி போக்குவரத்தை உறுதி செய்ய கடல் வழி தொடர்பான ஐ.நா சட்டத்துக்கு அனைத்து நாடுகளும் மதிப்பு அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x