Published : 28 Jan 2017 10:55 AM
Last Updated : 28 Jan 2017 10:55 AM

உலக மசாலா: மூடநம்பிக்கையால் உயிர் பிழைத்த 700 வயது மரம்!

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கயாஷிமா ரயில் நிலையம் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறது. இரண்டு நடை மேடைகளுக்கு இடையே, மேற்கூரை துளை வழியே ஒரு மரம் பரந்து விரிந்து நின்றுகொண்டிருக்கிறது. இது மிக மிகப் பழமையான மரம் என்று மக்கள் சொன்னாலும், அதிகாரப்பூர்வமாக 700 வயது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 1910-ம் ஆண்டு இந்த மரத்துக்கு அருகில் ரயில் நிலையம் திறக்கப்பட்டது. பயணிகள் வெயிலுக்கும் மழைக்கும் இந்த மரத்தடியில்தான் ஒதுங்கினர். ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 1972-ம் ஆண்டு மரத்தை வெட்ட முடிவு செய்தனர். இந்த மரம் வெட்டப்படுவதை விரும்பாத சிலர், மரத்துக்கு அபூர்வ சக்தியிருப்பதாகக் கிளப்பிவிட்டனர். அந்த நேரம் தற்செயலாக ரயில் நிலையத்தில் வேலை செய்தவர்களுக்குச் சில பிரச்சினைகள் வந்தன. உடனே மரத்தை வெட்ட நினைத்ததால் தான் இந்தத் துன்பத்துக்கு ஆளானோம் என்று நினைத்தனர். மரம் வெட்ட வந்தவர்களுக்குக் கடுமையான ஜுரம் வர, மரம் வெட்டுவது தடைபட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரம் வெட்டுவதற் கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, ரயில் நிலையத்திலேயே ஒருவர் மரணம் அடைந்தார். அதுவரை நம்பாதவர்கள்கூட மரத்துக்கு உண்மையிலேயே சக்தி இருப்பதாக நம்பினர். இந்த மரத்துக்குத் தொந்தரவு கொடுக்காமல், நடைமேடையைக் கட்டிவிட்டனர். 40 ஆண்டு களில் மரத்துக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. மரத்தைப் பாதுகாப்பதற் காகச் சுற்றிலும் கண்ணாடியால் தடுப்பு போடப்பட்டிருக்கிறது.

மூடநம்பிக்கையால் உயிர் பிழைத்த 700 வயது மரம்!

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் புலம் பெயர்ந்த ஒருவர் வேலை செய்துவந்தார். தான் ஈட்டிய வருமானத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்தது போக, மீதியைத் தேவையில்லாமல் செலவு செய்துவிடுவார். திடீரென்று சீனப் புத்தாண்டுக்கு வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தார். கையில் பணமில்லை. வேறுவழியின்றி, சைக்கிளில் சென்றுவிட முடிவு செய்து, ஒரு மாதத்துக்கு முன்பே கிளம்பினார். கிட்டத்தட்ட 1,700 கி.மீ. தூரத்தை சைக்கிள் மூலம் கடந்தும் அவரால் ஊருக்குச் சென்று சேர முடியவில்லை. எக்ஸ்பிரஸ்வே பகுதியில் சைக்கிளில் சென்றவரை காவல் அதிகாரி வாங் ஷுவான் நிறுத்தி விசாரித்தார். தான் க்யுஹார் நகருக்குச் செல்ல வேண்டும் என்றார் அந்த மனிதர். “நான் அதிர்ந்து போனேன். அவர் தவறான வழியில் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரத்தைக் கடந்துவந்திருக்கிறார். இவருக்குச் சாலை சமிக்ஞைகள் புரியவில்லை என்பதால் பலரிடமும் கேட்டு, அவர்கள் சொன்ன திசையில் பயணம் செய்திருக்கிறார். அவரைப் புகைப்படங்கள் எடுத்துவிட்டு, ரயில் பயணச் சீட்டு வாங்கிக் கொடுத்தோம். ஒரு மாதத்துக்குப் பிறகு ஊருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார்” என்ற வாங் ஷுவான்.

இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x