Last Updated : 17 Aug, 2016 08:09 AM

 

Published : 17 Aug 2016 08:09 AM
Last Updated : 17 Aug 2016 08:09 AM

அசாம் வெள்ளத்தில் 1,700 கி.மீ. அடித்துச்செல்லப்பட்ட இந்திய யானை வங்கதேசத்தில் உயிரிழந்தது

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 1,700 கி.மீ. தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்ட இந்திய யானை, வங்கதேசத்தில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. அதைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடந்த ஜூன் 27-ம் தேதி பங்கபகதுர் (வங்க ஹீரோ) யானை சிக்கிக் கொண்டது. இதை மீட்பதற்காக நூற்றுக் கணக்கானோர் படகில் பின்தொடர்ந்தனர். வெள்ளத்தில் வங்கதேசத்தை அடைந்த இந்த யானையை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை 4-ம் தேதி ஓய்வுபெற்ற வன அதிகாரி தலைமையிலான இந்திய நிபுணர் குழுவும் மீட்புப் பணியில் இணைந்தது. ஆனால் 3 நாட்களுக்குப் பிறகு இந்திய குழு முயற்சியைக் கைவிட்டது.

இந்நிலையில் சுமார் 1,700 கி.மீ. தூரத்தைக் கடந்து சென்ற இந்த யானை, ஜமல்பூர் மாவட்டம் கொய்ரா கிராமத்தில் சதுப்பு நிலப் பகுதியில் சிக்கிக் கொண்டது. 4 டன் எடை கொண்ட இந்த யானையை வங்கதேச வனத் துறை குழுவினர் கடும் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 11-ம் தேதி மீட்டனர்.

மிகவும் சோர்வாக இருந்த இந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நேற்று காலை 7 மணிக்கு யானை உயிரிழந்ததாக மீட்புக் குழுவின் தலைவர் ஆஷிம் மாலிக் தெரிவித்தார்.

இதுகுறித்து வங்கதேச வனவிலங்கு பாதுகாப்புத் துறை தலைவர் ஆஷித் ரஞ்சன் பால் கூறும்போது, “வெள்ளத்தில் அடித்து வந்த யானையைக் காப்பாற்ற வன அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், போலீ ஸார் உள்ளிட்டோர் கடந்த 48 நாட்களாக தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும் அதைக் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x