Published : 01 Feb 2014 11:42 AM
Last Updated : 01 Feb 2014 11:42 AM

நான் பொறுப்பில்லாத மாணவன்: அதிபர் ஒபாமாவின் மலரும் நினைவுகள்

பள்ளிப் பருவத்தில் நான் பொறுப்பில்லாத மாணவனாக இருந்தேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் கல்விக் கொள்கை தொடர்பாக டென்னெஸ்ஸி நகரில் பேசிய அவர், தனது பள்ளிப் பருவக் காலத்தை நினைவுகூர்ந்தார். அவர் பேசியதாவது:

எனக்கு 6 வயதிருக்கும்போது நான் வெளிநாட்டில் வளர்ந்தேன். இதனால் நான் படிப்பில் பின்தங்கிவிடுவேன் என்ற கவலை எனது தாயாருக்கு இருந்தது. அதனால் அதிகாலையிலேயே என்னை தட்டி எழுப்பி படிக்கச் சொல்வார். சூரியன் உதிக்கும் முன்பே எழுவது எனக்குப் பிடிக்காது. அம்மாவிடம் அடிக்கடி அடம் பிடிப்பேன். ஆனால் பிற்காலத்தில் அந்தப் பழக்கம் என்னில் நிலைத்துவிட்டது. எழு, எட்டு வயது இருக்கும்போது அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து படிக்கத் தொடங்கிவிடுவேன்.

சில நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் எனது பள்ளிப் பருவம் முழுவதும் நான் பொறுப்பில்லாத மாணவனாகத்தான் இருந்தேன். எனது தாயார் தனி ஆளாக என்னையும் என் சகோதரியையும் வளர்த்தார். அதனால் பொருளாதாரரீதியாக அவர் மிகவும் சிரமப்பட்டார். எங்களிடம் அதிக பணம் இல்லை.

இருப்பினும் ஆசிரியர்கள், சமுதாயம், நமது நாடு எனது படிப்புச் செலவுக்கு உதவின. அரசு சார்பில் வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை பேரூதவியாக இருந்தது. அதனால்தான் என்னால் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடிந்தது. எனது மனைவி மிஷெல் சாதாரண ஒரு தொழிலாளியின் மகள். அவரும் நல்ல பள்ளி, கல்லூரிகளில் படித்து தேர்ச்சிப் பெற்றுள்ளார். அதற்கு காரணம் நமது தேசம்.

அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இதுபோன்ற தரமான கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதுதான் எனது ஆசை, கனவு என்றார் ஒபாமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x