மாசே துங்கின் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம்

மாசே துங்கின் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம்
Updated on
1 min read

சீன கம்யூனிச தலைவர் மாசே துங்கின் தவறுகளை விட அவரது சாதனைகளே உயர்ந்தவை என்று அந்நாட்டில் 85 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மாசே துங்கின் 120வது பிறந்த நாள் சீனாவில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு ஆதரவு ஊடகம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவரும், சீன மக்கள் குடியரசின் நிறுவனருமான மாசே துங் பற்றி அந்நாட்டில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்குப் பின், சீனாவில் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தியவர், வலிமையும் வளமும் நிறைந்த சீனாவை உருவாக்க முயன்றவர் என புகழப்பட்டாலும், இவரது சமூக-பொருளாதார கொள்கைகளால் நாட்டில் பஞ்சம் உருவாகி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தது மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி கடும் விமர்சனங்களும் உள்ளன.

இந்நிலையில், மாசே துங் செய்த தவறுகளை விட அவரது சாதனைகள் உயர்ந்தவையா என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நாளேடான குளோபல் டைம்ஸ் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் ஆமாம் என்று 78.3 சதவீதம் பேரும், இதை உறுதியாக கூறுகிறேன் என்று 6.8 சதவீதம் பேரும் சொன்னதாக அந்நாளேடு தெரிவித்துள்ளது. 11.7 சதவீதம் பேர் இதனை மறுப்பதாகவும், 3 சதவீதம் பேர் தங்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்று கூறியதாகவும் அந்நாளேடு தெரிவிக்கிறது.

மாசே துங்கின் செயல்பாடுகளில் 70 சதவீதம் சரி, 30 சதவீதம் தவறு என்பதே, 1976ல் மாசே துங் இறந்தது முதல் சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறி வரும் கருத்தாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in