Last Updated : 10 Jun, 2016 10:41 AM

 

Published : 10 Jun 2016 10:41 AM
Last Updated : 10 Jun 2016 10:41 AM

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 4

பனாமா பகுதியில் தொடக்கத்தில் ஒரு ரயில் பாதையை எழுப்புவதில் ஆர்வம் காட்டி அதைச் செயல்படுத்தியது அமெரிக்கா. பிறகு பனாமா கால்வாயை எழுப்பும் பணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இனி? ...

1878-ல் பனாமா பகுதியில் கால்வாயை நிறுவும் பணியை லூசியனட் நெப்போலியன் என்பவருக்கு கொலம்பியா வழங்கியது. அவர் அந்த உரிமையை வேறொரு நிறுவனத் துக்கு விற்றுவிட்டார். இந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே சூயஸ் கால்வாயை உருவாக்கிய அனுபவம் இருந்தது (உலகிலேயே செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கால்வாய்களில் மிகப் பெரியது சூயஸ். அடுத்தது பனாமா).

இந்த இடத்தில் இன்னொன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். கால்வாய் என்றதும் ஏதோ நடுவிலுள்ள கொஞ்சம் மண்ணை நீக்கி கடலின் இரு பகுதிகளையும் இணைப்பது என்பதல்ல. பனாமா கால்வாய் மிக பிரம்மாண்டமான ஒரு திட்டம். அதன் சில பகுதிகளில் கடல் மட்டத்துக்கு மேலே கூட பாதை உண்டு!

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமாபுரி சக்கரவர்த்தியான ஐந்தாம் சார்லஸ் கூட, பனாமா கால்வாய் குறித்து யோசித்து ஆய்வு ஒன்றை செய்யச் சொன்னார். ஆனால் அது நனவாகவில்லை.

பனாமா கால்வாய் ஒரு வழியாக 1882-ல் உருவாகத் தொடங்கியது. ஆனால் அது பாதி கட்டப்பட்ட நிலையிலேயே அதற்கான உரிமையைப் பெற்ற நிறுவனம் திவாலாகிவிட்டது.

சுமார் 580 லட்சம் கனமீட்டர் பூமி வெட்டப்பட்ட நிலையில், இதை அப்படியே ‘நியூ பனாமா கெனால் கம்பெனி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட மற்றொரு பிரான்ஸ் நிறுவனத்துக்கு விற்று விட்டது. இந்த நிறுவனம் ‘கால்வாயை உருவாக்குவது எங்கள் நோக்கமல்ல. மேலும் அதிக விலைக்கு யாருக்காவது விற்று லாபம் ஈட்டவே இந்த உரிமையை வாங்கினோம்’ என்பதைத் தன் செய்கை களால் உணர்த்தியது.

இந்த நிறுவனத்தின் தலைவர் பெர்டினாண்ட் ஸெஸெப்ஸ். எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய்கூட இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

ஆனால் பனாமா கால்வாயைப் பொருத்த வரை இவர் தீட்டிய திட்டங்கள் சரியில்லை என்கிறார்கள். நிறைய கட்டுமானச் சிக்கல்கள். தவிர கால்வாய் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கொள்ளை நோய்களால் கொத்துத் கொத்தாக மடிந்தனர்.

சூயஸ் கால்வாய் போலவே பனாமா கால்வாயும் முழுவதும் கடல் மட்டத்திலேயே இருக்குமாறு பெர்டினாண்ட் ஸெஸெப்ஸ் திட்டமிட்டார். ஆனால் இதற்காக கால்வாயைக் குடைவது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது.

பின்னர் இந்தச் சிக்கலைத் தீர்க்க குஸ்டவ் ஈபில் என்பவரை வரவழைத்தார் பெர்டினான்ட் (பாரிஸிலுள்ள உலகப் புகழ் பெற்ற ஈபில் கோபுரத்தை வடிவமைத்தவர் இவர்தான்). ஆனால் விரைவிலேயே பெர்டினான்டின் நிறுவனம் திவாலானது. அந்த நிலையில் 26 கோடி டாலர்கள் பனாமா கால்வாய்க்காக செலவிடப்பட்டிருந்தன. 7 கோடி கன யார்டு அளவு கொண்ட மண் குடைந்தெடுக்கப்பட்டிருந்தது.

இது பிரான்சில் பெரும் புயலைக் கிளப்பியது. பெர்டினாண்ட், அவரது மகன் சார்லஸ், குஸ்டவ் ஈபில் ஆகியோர் ‘ஏமாற்றுதல் மற்றும் மோசமான நிர்வாகம்’ ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குஸ்டவ் ஈபில் தன் தொழிலிலிருந்து விலகிக் கொண்டார். தன் மீதி வாழ்நாளை அறிவியல் ஆராய்ச்சியில் செலவழித்தார். 1894-ல் பெர்டினாண்ட் இறந்துவிட்டார்.

அதே ஆண்டு புதிய பிரெஞ்சு நிறுவனம் உருவானது. திவாலான நிறுவனத்தைத் தனதாக்கிக் கொண்டு, பனாமா கால்வாய் திட்டத்தைத் தொடரத் தொடங்கியது. ஆனால் விரைவிலேயே இந்தக் கால்வாய் திட்டத்தை தான் கைவிட்டு விடுவதாக இந்த நிறுவனம் அறிவித்தது.

அமெரிக்கா, பனாமா கால்வாய் மீது ஈடுபாடு கொண்டிருந்தாலும் அது முதலில் நிகாரகுவா பகுதியின் வழியாக கால்வாய் உருவாக்குவதில் அதிக ஈடுபாடு காட்டியது. ஆனால் நிகாரகுவா பகுதி எரிமலைகள் நிரம்பியதாக இருந்தது தெரிய வந்ததும் பனாமா கால்வாயை ஏற்றுக் கொண்டது.

(இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு சீன நிறுவனம் ஒன்று நிகாரகுவா அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதும் இதன்படி அங்கு ஒரு கால்வாய் 40 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் என்பதும் சமீபத்திய தகவல்கள்).

பொருளாதார நோக்கத்துடன் ராணுவ கோணத்திலும் அமெரிக்காவுக்கு ‘பனாமா கால்வாய் கனவு’ அதிகமாகத் தொடங்கியது. அப்போது அதன் ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் அந்த பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து கால்வாய் கட்டும் உரிமையை வாங்கிக் கொள்ள சம்மதித்தார்.

பனாமா கால்வாய் உருவானதும் அதை மிக அதிகமாகப் பயன்படுத்தியது அமெரிக்கக் கப்பல்கள். அதற்கு அடுத்ததாக சீனா, சிலி, கொலம்பியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் பனாமா கால்வாயைப் பயன்படுத்திக் கொண்டன.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x