

தென் சீனக் கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி 4-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. தற்போது தேடுதல் எல்லை விரிவாக்கப்பட்டு ஆயிரம் கடல்மைல் பரப்பில் 10 நாடுகளைச் சேர்ந்த 36 போர் விமானங்கள், 40 போர்க்கப்பல் கள், நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடி வருகின்றன.
இதனிடையே சீன விண்வெளி ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் 10 செயற்கைக்கோள்கள் மூலம் கடல் பகுதியை ஆய்வு செய்து வரு கின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சனிக் கிழமை அதிகாலை 12.41 மணிக்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.
அதில் 152 சீனர்கள், 5 இந்தியர்கள் உள்பட 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும் விமானி உள்பட 12 ஊழியர்களும் இருந்தனர். வியட்நாம் எல்லையில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து திடீரென மறைந்தது.
கடந்த 4 நாள்களாக பத்து நாடுகள் கூட்டாக சேர்ந்து விமானத்தை தேடியும் இது வரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து விமானத்தை கண்டறிய சீன அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த நாட்டின் விண்வெளி ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் 10 செயற்கைக்கோள்கள் மூலம் கடல் பரப்பை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலாக்கா ஜலசந்திக்கு திசை மாறிய விமானம்
மாயமான மலேசிய விமானம் மலாக்கா ஜலசந்திக்கு திசை மாறி பறந்திருப்பது ரேடார் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு விமானப் படை அதிகாரிகள் கூறியபோது, கோட்டா பாரு என்ற பகுதியில் இருந்து விமானம் திசை மாறி மலாகா ஜலசந்தி பகுதியில் மிகவும் தாழ்வாகப் பறந்திருப்பது ரேடார் பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது என்றனர்.
இந்தப் பகுதி உலக வணிக கப்பல் போக்குவரத்தில் மிக முக்கிய இடமாகும். மலேசியாவின் மேற்கில் அமைந்துள்ள அந்த கடல் பகுதியில் தற்போது தீவிரமாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.