

தாய்லாந்தைச் சேர்ந்த அனிருட் மலே தற்போது உலக பிரபலமாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் குறித்தான வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
காரணம் என்னவென்று யோசிக்கீறீர்களா? போலீஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்து மிரட்டிய ஒருவரை தனது மனிதத்தாலும், அன்பாலும் அவரது குற்றத்தை உணர வைத்து சரணடையச் செய்திருக்கிறார் அனிருத்.
இந்தச் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயுள்ளது. தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,
"தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள ஹுவாயி கவாங் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜுன்17-ம் தேதி, கத்தியுடன் ஒரு நபர் நுழைந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.
அந்த போலீஸ் நிலையத்திலிருந்த அனிருத் என்ற போலீஸ் அதிகாரி மிரட்டல் நபர் ஏதோ மன அழுத்தத்தில் இருப்பதை தெரிந்து கொண்டுள்ளார். தொடர்ந்து அந்த நபரை நிதானமடையச் செய்து அன்பாக பேச்சு கொடுத்துள்ளார். அந்த நபர் அனிருத் பேச்சு கொடுக்கக் கொடுக்க அழத் தொடங்குகிறார்.
அனிருத் ஒரு கட்டத்தில் அவரது கையிலிருக்கும் கத்தியை தன்னிடம் வழங்குமாறு கூறுகிறார். சிறிய பயத்துடன் அதனை செய்ய மறுக்கும் அந்த நபர் ஒரு கட்டத்தில் அனிருத் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கத்தியை அனிருத்திடம் வழங்கி தனது இரு கைகளையும் தூக்கி சரணடைந்து அழுகிறார். அவரை கைது செய்யாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு சமாதானப்படுகிறார்.
அனிருத் அவரை நற்காலியில் அமர வைத்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து தண்ணீர் அருந்த வைக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் காட்சி அந்த போலீஸ் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் மூலம் கவனம் பெற்றவராக மாறியுள்ள அனிருத் இது குறித்து கூறும்போது, "அவர் போலீஸ் நிலையத்துக்கு வரும்போது மிகுந்த மன அழுத்ததுடனும், பதற்றமாகவும் காணப்பட்டார். இதனை நான் புரிந்து கொண்டேன்.
அவரிடம் பேச்சு கொடுத்தபோது, அவர் ஒரு முன்னாள் இசைக் கலைஞர். தற்போது பாதுகாவலராக பணியாற்றி வருகிறார் என்றும், அவர் வேலை பார்த்ததற்காக 3 நாட்கள் சம்பளம் அவருக்கு அளிக்கப்படாமல் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் அவரது கிட்டார் இசை கருவியும் திருடு போயுள்ளது. இதன் காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
அவரது நிலையை அறிந்து கொண்டு என்னிடம் கிட்டார் ஒன்று உள்ளது அதை அளிக்கிறேன், கத்தியை என்னிடம் தாருங்கள் என்று கூறினேன். அவரும் என் மீது நம்பிக்கை கொண்டு அளித்து விட்டார்" என்றார்.
அனிருத்தின் இந்த மனிதாபிமானச் செயலுக்கு சமூக வலைதளத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சரணடைந்த நபர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் ஹுவாயி கவாங் போலீஸார்.