

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வட இலங்கையில், இந்திய உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட கிளிநொச்சி – பளை இடையிலான 27.5 கி.மீ. ரயில்பாதை நேற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இலங்கையில் வடக்கு ரயில்வே மறுசீரமைப்பு திட்டத்துக்காக இந்தியா 80 கோடி டாலர் (சுமார் ரூ. 4,944.80 கோடி) சலுகைக் கடன் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 பகுதிகளில் பணிகள் முடிந்து ரயில்பாதைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேதவாச்சியா – மது ரோடு இடையிலான ரயில்பாதை மே 2013ல் திறக்கப்பட்டது. பிறகு ஓமந்தை – கிளிநொச்சி இடையிலான ரயில்பாதை கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கிளிநொச்சி – பளை இடையிலான ரயில்பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா பங்கேற்று பேசுகையில், “இந்தியா – இலங்கை இடையிலான பன்னெடுங்கால உறவில், கிளிநொச்சி – பளை ரயில்பாதை திறப்பு ஒரு முக்கிய மைல்கல். வட இலங்கையில் இயல்பு வாழ்க்கை திரும்பவும், வாழ்வாதார நடவடிக்கைகள் அதிகரிக்கவும் இது உதவும். மேலும் நல்லிணக்கம், ஒருமைப்பாடு பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவும்.
இந்த சீரமைப்பு திட்டம் மேலும் விரிவடையும்போது, தெற்கு இலங் கையைச் சேர்ந்த ஒருவர் தலைமன்னார் – ராமேஸ்வரம் இடையிலான பகுதியை படகு அல்லது கப்பல் மூலம் கடந்துவிட்டால் அவர், ரயில் மூலமே பிஹாரில் உள்ள புத்த கயாவுக்கு செல்ல முடியும்.
மேலும் இந்தியாவின் வடக்கில் உள்ள காஷ்மீர், மேற்கில் உள்ள குஜராத், வடகிழக்கில் உள்ள அசாம் என இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் ரயில் மூலமே சென்றுவர முடியும்” என்றார்.