

ஐ.எஸ். அமைப்புக்கு சாதகமான சூழ்நிலையைத்தான் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக பென்னிசில்வேனியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து பேசிய ஜோ பிடென்,” டிரம்பின் சிந்தனைகள் தவறனாதாக மட்டும் இல்லாமல் ஆபத்தானதாகவும் அமெரிக்காவுக்கு தொடர்பில்லாமலும் உள்ளது. மேலும் அவர் (டொனால்டு டிரம்ப்) அமெரிக்காவின் அரசியலைப்புச் சட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல் அறியாமையில் பேசி வருகிறார்.
அத்துடன், டிரம்ப் உண்மைக்கு மாறான தகவல்களை அமெரிக்க மக்களிடம் கொண்டு சென்று தாய்நாட்டு மக்களைப் பிரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். நம்மிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்றுதான் ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. அதற்கான சாதகமான சூழ்நிலையைத்தான் டிரம்ப் ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த வாரத்தில் புளோரிடாவில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற டிரம்ப், ஒபாமாவை ஐ.எஸ் அமைப்பின் நிறுவனர் என்று குற்றஞ்சாட்டினார். இது ஒரு மோசமான கருத்து. முஸ்லிம்களைப் பற்றிய அவருடைய புரிதல் அபத்தமாகவுள்ளது.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கைகளை குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் மற்றும் அவருடைய குழுவினரை விட அதிகமாக புரிந்து வைத்துள்ளார்” என்றார் ஜோ பிடென்.