Last Updated : 25 Jun, 2016 09:23 AM

 

Published : 25 Jun 2016 09:23 AM
Last Updated : 25 Jun 2016 09:23 AM

அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் என்எஸ்ஜி-யில் இந்தியாவை உறுப்பினராக்க முடியாது: அணுசக்தி விநியோக குழு அறிக்கை

“அணுஆயுத பரவல் தடை ஒப்பந்த த்தை முழுமையாக, திறம்பட அமல்படுத்த உறுதியான ஆதரவு அளிக்கிறோம்’’ என்று அணுசக்தி விநியோகக் குழு (என்எஸ்ஜி) திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதன் மூலம், என்எஸ்ஜி.யில் இந்தியா உறுப்பினராக சலுகை வழங்க முடியாது என்று மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளது.

என்எஸ்ஜி.யில் உறுப்பினராக இந்தியா முறைப்படி விண்ணப்பித்துள்ளது. இந்த அமைப்பில் 48 நாடுகள் உள்ளன. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில், சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‘அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்’ (என்பிடி) இந்தியா கையெழுத்திட மறுத்து வருகிறது. என்எஸ்ஜி.யின் விதிமுறைப்படி என்பிடி.யில் கையெழுத்திடாத நாட்டை உறுப்பினராக சேர்க்க கூடாது. இந்தியாவுக்கு சலுகை வழங்கி சேர்த்து கொண்டால், பாகிஸ்தானையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று சீனா கூறி வருகிறது.

தென் கொரிய தலைநகர் சியோலில் என்எஸ்ஜி.யின் 2 நாள் உச்சி மாநாடு கடந்த வியாழக்கிழமை நடந்தது. இதில் இந்தியாவின் விண்ணப்பம் குறித்து பரிசீலிக்கப்பட்டது. அதன் பிறகு என்எஸ்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சர்வதேச அளவில் அணு ஆயுத பரவலை தடுக்க வேண்டும் என்பதில் என்எஸ்ஜி உறுதியாக உள்ளது. என்பிடி.யை முழுமை யாக, திறம்பட அமல்படுத்த என்எஸ்ஜி உறுதியான ஆதரவு அளித்து வருகிறது. எனினும், என்பிடி.யில் கையெழுத்திடாத நாடுகளையும் என்எஸ்ஜி.யில் சேர்த்து கொள்வது குறித்து தொடர்ந்து விவாதிப்போம்.

இந்தியாவின் விண்ணப்பம் குறித்து கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. மேலும், இந்தியாவுடன் மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து கடந்த 2008-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை குறித்தும், என்எஸ்ஜி.யின் உறுப்பு நாடுகளுக்குள் உள்ள ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எனினும், என்பிடி.யை உறுதியாக அமல்படுத்தும் விஷயத்தில் என்எஸ்ஜி தனது நிலையை தளர்த்தி கொள்ளவில்லை.

இவ்வாறு என்எஸ்ஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் என்பிடி.யில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு சலுகை வழங்கி உறுப்பினராக சேர்க்க முடியாது என்பதை என்எஸ்ஜி கூறியுள்ளது. சீனாவின் எதிர்ப்பால் என்எஸ்ஜி.யில் இந்தியா உறுப்பினராகும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

சீனா காரணம்

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, ‘‘அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு ஒரேயொரு நாடுதான் தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டது’’ என சீனா மீது மறைமுகமாக குற்றம்சாட்டினார். அதே சமயம் இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மின்சார உற்பத்தி உட்பட மக்கள் பயன்பாட்டுக்கான திட்டங் களை நிறைவேற்று வதற்கு அணுசக்தி தொடர்பான பொருட் களை உறுப்பினர் நாடுகளுக்கு என்எஸ்ஜி விநியோகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளார் ஆனந்த் சர்மா நேற்று கூறியதாவது:

வெளியுறவு விஷயத்தில் ஆழமான, தெளிவான, கவனமான அறிவு வேண்டும். வெளியுறவு என்பது தமாஷான விஷயம் அல்ல. இதை பிரதமர் மோடி இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். என்எஸ்ஜி.யில் உறுப் பினராகும் விஷயத்தில் இந்தியா வுக்கு தற்போது சங்கடம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x