

மாயமான மலேசிய விமானம் இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இரணைமடு விமான தளப்பகுதி யில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என 'பிஸினஸ் இன் சைடர்' எனும் ஆங்கில இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
மலேசிய அரசுக்குச் சொந்தமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எம்.எச். 370 விமானம் 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் கோலாலம்பூரில் இருந்து மார்ச் 8 அன்று 12.41 மணிக்குப் புறப்பட்டது. பின்னர் 1.20 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமானது.
இந்த விமானம் தாய்லாந்து முதல் கஜகஸ்தான் எல்லை வரையோ அல்லது இந்தோனேஷியா முதல் தென் இந்திய பெருங்கடல் வரையோ பறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இந்த இரு வழிகளிலும் விமானத்தை தேடும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘பிஸினஸ் இன் சைடர்' எனும் இணையதளம் பரபரப்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
மாயமான மலேசிய விமானம் காணாமல் போன நான்கு மணி நேரத்தில் பல இடங்களை சென்றடைந்திருக்க முடியும். இதில் 2 ஆயிரத்து 530 மைல்கள் வரை பயணம் செய்ய தேவையான எரிபொருள் விமானத்தில் இருந்துள்ளது. மேலும் இந்த விமானம் இந்தியா, இலங்கை அல்லது பாகிஸ்தான் நோக்கி பயணித்திருக்க வேண்டும் என அந்த இணையதளத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தமான் தீவுகளில் பல தீவுகள் மக்கள் குடியேறாத அடர்ந்த காடுகளை கொண்டுள்ளன. அங்கு ஒரே ஒரு விமானம் நிலையம் மட்டுமே உள்ளது. எனவே அப்பகுதியில் தரையிறக்க சாத்தியம் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மேலும் இலங்கையின் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இரணைமடு விமான தளப்பகுதியில் மலேசிய விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் எனவும் ‘பிஸினஸ் இன் சைடர்' இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாயமான மலேசிய விமானத்தை இலங்கை கடல் பகுதியில் தேட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் அமெரிக்க விமானங்களுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.