Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

ஈரான் கச்சா எண்ணெய்: தடையிலிருந்து இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா விலக்கு

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையிலிருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

ஈரானிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவு கணிசமாகக் குறைந்துவருவது தெரியவருவதால் சீனா, இந்தியா, கொரிய குடியரசு, துருக்கி, தைவான் உள்ளிட்ட நாடுகள் தடையிலிருந்து விலக்கு பெற தகுதி பெறுகின்றன. தடைக்கு அடிப்படையாக விளங்கும் 2012ம் ஆண்டு நிதியாண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தின் கீழ் இது சாத்தியமாகிறது என்றார்.

ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதலை கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளதால் , இறக்குமதி செய்யும் நாடுகளில் உள்ள வங்கிகளுக்கும் அமெரிக்காவில் உள்ள நிதிச் சேவை நிறுவனங்களுக்கும் இடையிலான பரிவர்த்தனை தடைபடாது என்பது இதன் பொருள். மீறி இந்த நாடுகள் எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தால் தடை அமல்படுத்தப்படும்.

கடந்த 6 மாதங்களாக இந்த நாடுகளின் எண்ணெய் கொள்முதல் அளவை பரிசீலித்த போது இது மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்தது.

இதற்கு பலனாக இந்த நாடுகள் ஈரானிடமிருந்து 180 நாள்களுக்கு குறைந்த அளவுக்கு அபராதம் ஏதுமின்றி கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ளலாம்.

ஈரானிடமிருந்து மலேசியா, தென் கொரியா, சிங்கப்பூர், இலங்கை ஆகியவை கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திவிட்டதால் அந்த நாடுகளும் தடையிலிருந்து விலக்கு பெற தகுதி பெறுகின்றன என்றார் கெர்ரி.

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை கணிசமாக நம்பி இருக்கவேண்டிய நிலை ஏற்படாத வகையில் இந்த நாடுகளுக்கு போதுமான அளவுக்கு ஈரானிலிருந்து அல்லாமல் மாற்று வழிகளில் எண்ணெய் விநியோகம் செய்வதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிபடத் தெரிவித்தததைத் தொடர்ந்து கெர்ரி விலக்கு கொடுத்துள்ளார்.

ஈரான் அல்லாத பிற நாடுகளிலிருந்து எண்ணெய் விநியோகம் போதுமான அளவுக்கு இருப்பதால் வெளிநாடுகள் ஈரான் எண்ணெய் கொள்முதலை வெகுவாக குறைத்துக்கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைய தேவை, ஈரான் அல்லாத பிற நாடுகளில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருள்களின் கையிருப்பு, மற்றும் கூடுதலாக உற்பத்தி செய்யும் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்பதற்காக, மீறி இறக்குமதி செய்யும் பிற நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கடுமையான தடைகளை அமல்படுத்தியுள்ளது அமெரிக்கா. ஈரானின் அணு சக்திதிட்டங்கள் ஆக்கபூர்வ நோக்கங்களுக்கு அல்ல, ஆயுதம் தயாரிக்கவே என அமெரிக்கா குற்றம் சாட்டிவருகிறது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துவருகிறது ஈரான். எனவே அதன் அணு சக்தி திட்டங்களை முடக்குவதற்காக பொருளாதார நெருக்கடி மூலம் ஈரானை பணியவைக்க கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்க்க கடுமையான தடைகளை அமல்படுத்தியுள்ளது அமெரிக்கா. 2012ம் ஆண்டு முதல் இது அமலில் உள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டத்தில் எவ்வித மேம்பாடும் ஏற்படாத வகையில் இடைக்கால ஒப்பந்தம் ஒன்று ஜெனிவாவில் கடந்த 24ம் தேதி ஈரானுக்கும் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசுகளுக்கும் இடையே கையெழுத்தானது. 6 மாதத்துக்கு அமலில் இருக்கக்கூடிய இந்த ஒப்பந்தம் விரிவான ஒப்பந்தத்துக்கு வழிகோலும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x