60 கோடி இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை: உலக வங்கி

60 கோடி இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை: உலக வங்கி
Updated on
1 min read

சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஐ.நா. சபை சார்பில் நவம்பர் 19-ம் தேதி கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுமார் 100 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 53% வீடுகளில் கழிப்பறை இல்லை... இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை வசதி தொடர்பாக இந்தியக் குழந்தைகளிடம் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது, அதில், முதலாம் வயது பருவத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதியைப் பெற்ற குழந்தைகள் தங்களின் 6-ம் வயதில் எண்களையும் எழுத்துகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியக் குழந்தைகள் உயரம் குறைவாக உள்ளனர். அதேநேரம் ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையில் வாடும் குழந்தைகள், இந்திய குழந்தைகளைவிட உயரமாக உள்ளனர். சகாரா பகுதி ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 5 வயது சிறுமிகளைவிட இந்திய சிறுமிகள் 0.7 செ.மீட்டர் உயரம் குறைவாக உள்ளனர். இந்த முரண்பாட்டை 'ஆசிய புதிர்' என்றுதான் கூற வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சுகாதாரக் குறைவு மிக முக்கிய காரணியாக உள்ளது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பான் கி -மூன் யோசனை... ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: உலகில் 250 கோடி பேருக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கழிப்பறை இல்லை. இதை கருத்தில் கொண்டு முதல்முறையாக கழிப்பறை தினத்தை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 'போதிய கழிப்பறை வசதி இல்லாததால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உள்பட்ட 8 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றனர். உலகளாவிய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண 2025-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கழிப்பறை வசதி கிடைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in