Published : 23 Sep 2013 03:21 PM
Last Updated : 23 Sep 2013 03:21 PM

பாகிஸ்தான் தேவாலய தாக்குதலில் பலி 81 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள தேவாலயத்தைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

கைபர் பக்துன்கவா மாகாணம், பெஷாவர் நகரி்ன் கொஹாட்டி கேட் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாடு நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வழிபாடு முடிந்து வெளியில் வந்துகொண்டிருந்த போது, காரில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்தது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு மர்ம நபர் தனது கால்களில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இந்த இரட்டை வெடிகுண்டு வெடிப்புச் சம்பவத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 145 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் வரலாற்றில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆக இது கருதப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், கைபர் பக்துன்கவா மாகாண காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆசன் கனி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக நசிர் துர்ராணி இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக 4 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், சிறுபான்மையினத்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக புதிய பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பெஷாவர் நகர காவல் துறை கண்காணிப்பாளர் இஸ்மாயில் கரக் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் 20 முதல் 25 வயதுக்குள்பட்டவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x