

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்திய நிலையில் தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்காக சீனா வக்காலத்து வாங்கியுள்ளது.
அதாவது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது என்று சீனா கூறியுள்ளது.
சீன அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச நாடுகளின் கூட்டுறவு பலப்படுத்தப்பட வேண்டும், பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகள் முழு அங்கீகாரமும் ஏற்புடைமையும் அளிக்க வேண்டும்.
பயங்கராதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முன்னணி நாடாக விளங்குகிறது, இது குறித்து பாகிஸ்தான் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது” என்றார் அவர்.
பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்ப் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்திருந்தது,
இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே சீனா தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து கூறிய சீனா, ‘இத்தகைய உறவுகள் உடன்பாடான ஆக்கப்பூர்வ பங்காற்றும்’ என்றார்.