

செவ்வாய்கிரக ஆய்வுக்கு, இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி இரு வாரங்கள் முடிந்துள்ள நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ‘மாவென்’ என்ற ஆய்வுக்கலத்தை அனுப்பியுள்ளது.
புளோரிடாவில் உள்ள விமானப்படைத் தளத்திலிருந்து ‘செவ்வாய் வளிமண்டலம் மற்றும் ஆவியாதல் பரிணாமம்’ (எம்ஏவிஇஎன்) விண்கலம் ஏவப்பட்டது.
ஏவப்பட்ட 53 ஆவது நிமிடத்தில் அட்லஸ்-5 சென்டார் ஏவுகலத்திலிருந்து ‘மாவென்’ பிரிந்தது. செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை ‘மாவென்’ அடைய, பத்து மாதங்கள் ஆகும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
“செவ்வாய்கிரகம் தன் வளிமண்டலத்தை அடிக்கடி இழப்பது குறித்தும், செவ்வாய்கிரகத்தில் அதிகப்படியான நீர் இருப்பு குறித்தும் ‘மாவென்’ ஆய்வு செய்யும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய்கிரகத்தை மாவென் அடையும். ‘மாவென்’ ஆய்வுக்கலத்தில் எட்டுவிதமான ஆய்வு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்று கொலராடோ பௌல்டர்ஸ் பல்கலைக்கழக, வளிமண்டலம் மற்றும் விண்வெளி அறிவியல் ஆய்வக முதன்மை ஆய்வாளர் புரூஸ் ஜகோஸ்கை தெரிவித்துள்ளார்.