

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
அந்த நாட்டு பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் கடந்த அக்டோபர் முதல் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போராட்டம் தீவிரமானதால் கடந்த டிசம்பர் 9-ம் தேதி பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தனது அமைச்சரவையைக் கலைத்தார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலை ஜனநாயகக் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும், அரசியல் கட்சி சாராத இடைக்கால பிரதமர் தலைமையில் மக்கள் மன்றம் அமைக்கப்பட வேண்டும். அந்த மன்றத்தின் மூலம் அரசியல் சீர்திருத்தங்கள் வரையறுக்கப்பட வேண்டும். அதன் பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ஏற்க மறுத்து வருகிறார்.
இதனிடையே தலைநகர் பாங்காக்கில் உள்ள தாய்-ஜப்பானிய விளையாட்டு மைதானத்தில் வேட்பாளர்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர் பலி
தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குச்சீட்டில் கட்சிகளுக்கு வரிசை எண் ஒதுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையறிந்த எதிர்க்கட்சியினர் தாய்-ஜப்பானிய மைதானம் முன்பு பெருந்திரளாகக் கூடினர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. திடீரென ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். ஆவேசமடைந்த போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் மீது போராட்டக்காரர்களும் கண்ணீர் புகைக் குண்டுகளையும் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ்காரர்கள் பலர் காய மடைந்தனர்.
30 கட்சிகளுக்கு அனுமதி
தாய்- ஜப்பானிய மைதான அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் சோம்சாய் ஸ்ரீசுதியாகோம் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 34 கட்சிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 30 கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதற்கு தகுதியானவை என்று அறிவிக்கப்பட்டது. அந்தக் கட்சிகளுக்கு வரிசை எண்களும் ஒதுக்கப்பட்டன. இதனிடையே ஆர்ப்பாட்டக்காரர்கள் மைதானத்துக்கு வெளியே பெருந்திரளாக கூடி கலவரத்தில் ஈடுபட்டதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேர்தல் ஆணையம் கவலை
தாய்லாந்து மன்னர் அறிவுரையின் பேரில் பிப்ரவரி 2-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் ஜனநாயகக் கட்சி தேர்தலைப் புறக்கணித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் ஆணையம் கவலையடைந்துள்ளது. அனைத்து கட்சிகளும் கலந்து பேசி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் வாக்குப் பதிவை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.