

சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கு ரஷ்யா அல்லது யாருடன் வேண்டுமானாலும் இணைந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், "ஐஎஸ் அமைப்பை அழிப்பதற்கு வழி இருந்தால், அமெரிக்கா எந்த நாட்டுடனும் இணைந்து ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறது. அந்த நாடு ரஷ்யாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி அமெரிக்கா தனது ஒத்துழைப்பை அளிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்காக நடத்தப்பட்டுவரும் வான்வழி தாக்குதலில், அமெரிக்கா இணைய இருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டது. ஆனால் இதனை அமெரிக்க ராணுவத் தளமான பென்டகன் மறுத்தது.
இந்த நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக அமெரிக்கா கூட்டுப் படைகள் சிரியாவில் ஐஎஸ் அமைப்பை அழிப்பதற்கு வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.