Published : 24 Sep 2013 08:46 AM
Last Updated : 24 Sep 2013 08:46 AM

கென்யாவில் முடிவுக்கு வந்தது 50 மணி நேர சண்டை: பிணைக் கைதிகள் மீட்பு

கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் அல் ஷபாப் பயங்கரவாதிகளால் பிடித்துவைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

பயங்கரவாதிகளுடனான கென்ய பாதுகாப்புப் படையினரின் 50 மணி நேர சண்டை முடிவுக்கு வந்தததாகவும், படையினரின் கட்டுப்பாட்டுக்குள்ள வணிக வளாகம் உள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் பெருவணிக வளாகத்துக்குள், சோமாலிய பயங்கரவாத அமைப்பான அல் ஷபாபைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 62 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 170 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வணிக வளாகத்துக்குள் பிணைக் கைதிகளைப் பிடித்துவைத்திருந்த பயங்கரவாதிகள், ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தினர். மூன்று நாட்களாக இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. கென்ய படையினருடன் இணைந்து, இஸ்ரேலிய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய கென்ய செஞ்சிலுவைச் சங்கம், மேலும் 63 பேரை காணவில்லை எனத் தெரிவித்துள்ளது. இவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி?

வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், மொத்தம் 10 முதல் 15 பயங்கரவாதிகள் வணிக வளாகத்துக்குள் புகுந்தது தெரியவந்தது. அவர்களிடம் கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. வணிக வளாகத்தின் முன்பகுதி வழியாக 8-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், மீதமுள்ளோர் பின் வாசல் வழியாகவும் நுழைந்துள்ளனர். செல்லும் வழியில் எதிர்ப்பு தெரிவித்தவர்களையெல்லாம் அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மாடியில் விருந்து நிகழ்ச்சிக்காக கூடியிருந்த உள்ளூர் வானொலியொன்றின் பணியாளர்கள் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். வளாகத்திலிருந்த கழிவறை, திரையரங்குகள் என அனைத்து இடங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். பொருள்களை வாங்க வந்திருந்தவர்களிடம் குரானில் இடம்பெற்றுள்ள வாசகங்களை தெரிவிக்குமாறு கோரியுள்ளனர். அதன்படி கூறியவர்களை விடுவித்துள்ளனர். மற்றவர்களை சுட்டுக் கொன்றனர் என்று தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர். சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆப்பிரிக்க யூனியன் படைகளுடன் இணைந்து கென்ய ராணுவம் செயல்பட்டதைக் கண்டித்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x