Published : 10 May 2017 09:19 AM
Last Updated : 10 May 2017 09:19 AM

உலக மசாலா: சக்கர நாற்காலியிலும் சாகசம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 43 வயது சாரா ஜேன், கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையேற்றம் செய்யும் வீராங்கனை, பயிற்சியாளர். 2013-ம் ஆண்டு காலில் ஏற்பட்ட வலியால் ஓர் எளிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அந்தச் சிகிச்சை இவரது இயக்கத்தையே முடக்கிவிட்டது. இடுப்புக்குக் கீழே முற்றிலும் செயலிழந்துவிட்டது. “எனக்கு சாகசங்களில் அளவு கடந்த ஆர்வம். உலகின் பல்வேறு மலைகளிலும் ஏறியிருக்கிறேன். ஆனால் ஒரு சிறிய சிகிச்சை முடக்கிவிட்டதில் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அப்போது என் மகனுக்கு ஐந்து வயது. நான் முடங்கியதால் அவன்தான் மிகவும் பாதிக்கப்பட்டான். அவனை அழைத்துக்கொண்டு எவ்வளவோ சாகசங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கற்பனை செய்திருந்தேன். அத்தனையும் வீணாகிவிட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புகைப்படக் கலைஞர்கள் பெஞ்சமின் வோன் வாங்கும் கரென் அல்சோப்பும் என் கனவை நிறைவேற்றுவதாகச் சொன்னார்கள். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் விரும்பிய விதத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஒரு குழுவினர் கடுமையாக உழைத்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சக்கர நாற்காலியோடு கயிற்றில் தொங்கியதும் என் மகனுடன் படங்கள் எடுத்ததும் என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது. என் மகனும் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தான். சக்கர நாற்காலிக்காரர்களாலும் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் படங்களைப் பயன்படுத்த இருக்கிறேன்” என்கிறார் சாரா.

சக்கர நாற்காலியிலும் சாகசம்!

இரவில் கணவர் தாமதமாக வரும்போது பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை போன் செய்கிறார்கள், நிமிடத்துக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள், சுவையான உணவைப் புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கிறார்கள் பெரும்பாலான மனைவிகள். ஆனால் சீனாவில் வசிக்கும் ஒரு பெண் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார். வீட்டு வாசலில் கார்ட் ரீடர் கருவியைப் பொருத்தியிருக்கிறார். கணவர் வெளியில் சென்று திரும்பும்போது கார்டை இயந்திரத்தில் தேய்க்க வேண்டும். தினமும் இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பும் கணவர், உருப்படியான காரணத்தைச் சொல்வதில்லை. தன் தோழியிடம் பிரச்சினைக்குத் தீர்வு கேட்டபோது, இந்த யோசனை கிடைத்தது. கார்ட் ரீடரை வீட்டில் பொருத்தினார். அருகில் ஒரு தாளில் விதிகளை எழுதி வைத்தார். 9 மணிக்குள் வீட்டுக்கு வந்தால், அருமையான இரவு உணவு வழங்கப்படும். சொன்ன நேரத்தை விட 30 நிமிடங்கள் தாமதமாக வந்தால் 970 ரூபாய் அபராதம். மேலும் 30 நிமிடங்கள் தாமதமாக வந்தால் அந்த வார இறுதியில் வீட்டு வேலைகள் முழுவதையும் செய்ய வேண்டும். “நான் எத்தனையோ வழிகளில் என் கணவரை வீட்டுக்குச் சீக்கிரம் வரும்படிச் சொல்லிப் பார்த்தேன். என்னால் செய்ய முடியாததை இயந்திரம் செய்துவிட்டது. கணவர் 9 மணிக்குள் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுகிறார். உண்மையாகவே தாமதமாகும் நாட்களில் சரியான காரணத்தை முன்கூட்டியே சொல்லிவிடுகிறார். இந்த சிஸ்டம் வந்த பிறகு எங்கள் இருவருக்குள்ளும் உறவு மேம்பட்டிருக்கிறது” என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ஹஸ்பண்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x