

பாகிஸ்தானில் பிற மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் ‘சிறுகச் சிறுக’ இனப்படுகொலையை அனுபவித்து வருகின்றனர் என்று பாகிஸ்தானின் புகழ்பெற்ற கல்வியாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் அரசியல்வாதி ஃபரானாஸ் இஸ்பஹானி என்பவர் கூறியுள்ளார்.
இந்த இஸ்லாமிய நாட்டில் “மிகவும் அபாயகரமான” முறையில் மதச்சிறுபான்மையினர் அழித்தொழிக்கப்படுவதாக அவர் எச்சரிக்கிறார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் கூறும்போது, “இந்தியா, பாகிஸ்தான் இரண்டாக உடையும் முன்பு இஸ்லாம் தவிர பிற மதங்களின் ஆரோக்கியமான சமச்சீர் நிலை இருந்தது. இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், ஸொராஷ்ரியர்கள் என்று அனைவரும் இணக்கமாக வாழ்ந்தனர். ஆனால் பிற மதச் சிறுபான்மையினரின் சதவீதம் பாகிஸ்தானில் 23% ஆக இருந்தது தற்போது 3% ஆகக் குறைந்துள்ளது.
நான் இதனை ‘சிறுகச்சிறுகப் படுகொலை;’ என்று அழைக்கிறேன், காரணம், ஏனெனில் இதுதான் வெளிப்படையாகத் தெரியாத ஒரு அழித்தொழிப்பு வேலை என்று நான் அபாயகரமானதாகக் கருதுகிறேன்” என்றார். இவரது நூல் ‘Purifying the Land of the Pure’ இந்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமானது.
“நான் பெயரிடும் இந்த சிறுகச்சிறுக படுகொலை என்பது ஒருநாளில் நிகழ்வதல்ல. சில மாதங்களில் நடப்பதும் அல்ல. சிறுகச் சிறுகச் சிறுக இத்தகைய படுகொலைகள் சட்டங்கள், ஸ்தாபனங்க்ள், ஆட்சியதிகாரங்கள், தண்டனை சட்டங்கள், பிற சமூகத்தினரின் மீது களங்கம் கற்பிக்கும் பாடப்புத்தக வகையறாக்கள் என்று இத்தகைய படுகொலைகள் ‘அமைப்பு’ ரீதியாக செய்யப்படுகிறது. இவ்வகையான ஜிஹாதி பண்பாடு மிகவும் மலிந்து விட்டது.
பாகிஸ்தானின் பயணம் சோர்வளிக்கக் கூடியது, பாகிஸ்தான் வளர்ந்து வந்த அந்தப் பண்பாட்டில் தற்போது இல்லை” என்றார் இஸ்பஹானி.
மதச்சிறுபான்மையினருக்கு எதிராக உலகம் முழுதுமே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதே என்ற கேள்விக்குப் பதில் அளித்த இஸ்பஹானி, சுதந்திர ஜனநாயக ஸ்தாபனங்கள் மற்றும் மதிப்பீடுகளைக் கொண்ட அமெரிக்காவே தற்போது மதச்சிறுபான்மையினருக்கு எதிராக திரும்பியுள்ளது அதிர்ச்சியளிப்பதாகும் என்றார்.
“அகதிகளை நோக்கியாகட்டும், யூதர்களை நோக்கியாகட்டும், அல்லது பிரான்சில் நூற்றாண்டுகள் கணக்காக வாழ்ந்து வரும் யூதர்களாகட்டும், அமெரிக்காவில் வாழும் யூதர்களாகட்டும், முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்துவர்கள் என்று இவர்கள் மீது ஒடுக்குதல் அதிகமாகி உலகம் மிகவும் அசிங்கமான ஒரு நிலைக்கு மாறிவருகிறது. நான் இந்தப் புத்தகத்தை எழுதிய நோக்கமே உலகம் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய நாடாக பாகிஸ்தான் நான் மேற்கூறிய இந்த அம்சங்களில் திகழ்ந்து வருகிறது என்பதே.
இந்தியாவில் வேறு மாதிரி. இந்திய அரசமைப்பு சட்டம் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. இந்தியாவில் தற்போது சமூகத்தின் இரண்டு வேறுபட்ட பின்னல்களுக்கிடையே தகராறு உள்ளது என்றாலும் சட்டங்கள் இந்தியாவில் ‘அனைத்து குடிமக்களும் சமமானவர்களே’ என்று கூறுகிறது. அமெரிக்காவிலும் இப்படித்தான் சட்டங்கள் உள்ளன.
சமீபத்தில் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட இந்து திருமணச் சட்ட மசோதா, அல்லது தீபாவளிக்கு விடுமுறை விடுவது போன்றவை வெறும் கண் துடைப்பே. மற்றபடி தினப்படி மதச்சிறுபான்மையினர்கள் சந்தித்து வரும் கவலைகள் மீது அக்கறையில்லை.
பிரதமர் கிறிஸ்மஸ், தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடலாம். ஆனால் வகுப்புவாத கொலைகாரர்களுக்கு ஏன் அவர் கட்சி வேட்பாளராக டிக்கெட் அளிக்க வேண்டும்? இதைப்பற்றி ஏகப்பட்ட கட்டுரைகள் உள்ளன, ஏகப்பட்ட புத்தகங்களும் வெளியாகியுள்ளன. நான் மட்டும் இதனைக் கூறவில்லை.
இதுதான் என் உணர்வு. பாகிஸ்தான் மக்களே வெறுப்பு அரசியல், சிந்தனைகள், உணர்வுகளை ஒதுக்கித் தள்ளி விட்டு அனைவரும் பாகிஸ்தான் குடிமக்களே என்று நினைத்து மாறாத வரை மசோதாக்கள், விடுமுறை போன்ற கண் துடைப்புகள் ஒன்றும் செய்ய முடியாது.
பாகிஸ்தானை தனது உத்தி ரீதியான் ராணுவ ரீதியான முக்கியத்துவத்துக்காக அமெரிக்கா பார்ப்பதை தவிர்த்து, பாகிஸ்தானின் மானுட பரிமாணங்களை அமெரிக்கா கவனிக்க வேண்டும்.
பாகிஸ்தான் அண்டை நாடுகள் என்ன கூறுகிறது என்பது பற்றி கவலையில்லை, பாகிஸ்தானில் விமர்சகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி கவலையில்லை, துரதிர்ஷ்டவசமாக அமெரிக்கா பாகிஸ்தான் மக்கள் பக்கம் நிற்கவில்லை என்பதுதான் உண்மை.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்டிப்பான மனிதர் போல் தெரிகிறார், இவராவது பாகிஸ்தானுக்கு எதிரான உறவில் சரியான பாதையை தேர்ந்தெடுப்பார் என்று கருதுகிறேன்” என்று கூறும் இஸ்பஹானி அமெரிக்காவில் தற்போது இருந்து வருகிறார்.