

இந்தியாவுக்கு எதிராக தனது மண்ணில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படாமல் இருப் பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத் தின் கூட்டு கூட்டத்தில் உரை யாற்றினார். அப்போது உலக ஜனநாயகத்தின் கோயிலாக அமெரிக்கா விளங்குவதாக புகழாரம் சூட்டினார். முன்னதாக அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசிய அவர், தீவிரவாதம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தார். இந்தியாவின் அண்டை நாட்டில் இருந்து தீவிரவாதம் கட்டவிழ்க்கப் படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்து வதற்கு, பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதை தடுக்க வேண்டும் என அந்நாட்டுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில், ‘‘இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக் கில் பாகிஸ்தானுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணித்து கூட்டுறவை மேம்படுத்தும் நடவடிக்கையில் இரு நாடுகளும் தேவையான நிலைப்பாடுகளை எடுக்கும் என நம்புகிறோம். அனைத்து தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் செயல் படுகின்றன. எனவே பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்தியாவுக்கு எதிராக தங்கள் மண்ணில் இருந்து எந்த சதிச் செயலும் தீட்டப் படவில்லை என்பதையும் பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ள ஒபாமா நிர்வாகம், அவரது சித்தாந்தத்தால் இந்திய அமெரிக்க உறவில் இருந்த வரலாற்று தயக்கங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளி யுறவு துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் இந்தியா, அமெரிக்க கூட்டுறவு மூலம் ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரையும், இந்திய பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத் தன்மையை நிலைநாட்ட முடியும் என்ற துணிச்சலான பார்வை தெரிந்தது. கடலில் சுதந்திரமாக செல்வதற்கும், பாதுகாப்பான முறையில் கடல் வழியாக வர்த்தகம் மேற்கொள்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தம் நிச்சயம் உதவும்’’ என்றார்.