

அமெரிக்க ராணுவத்தில் சீக்கிய வீரர்கள் டர்பன் அணிந்து பணி யாற்றலாம் என்று அந்த நாட்டு ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
எனினும் இது பொதுவான விதி அல்ல என்றும் ஒவ்வொரு தனிநபரின் கோரிக்கையை ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் பென்டகன் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் பல் வேறு மதங்களைச் சேர்ந்தோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவரவர் மதச் சம்பிரதாயங்களின்படி தாடி, நீண்டமுடி வளர்த்தல், பச்சை குத்துதல் ஆகியவற்றுக்கு பென்கடன் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ விதிகள் தளர்த்தப்பட்டு புதிய கொள்கை கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்டன. இது குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி கூறியதாவது: அமெரிக்க ராணுவத்தில் மதம் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சீக்கிய வீரர்கள் டர்பன் அணிந்து பணியாற்றலாம்.
எனினும் இது பொதுவான விதி அல்ல. ஒவ்வொரு தனிநபர்களின் கோரிக்கையையும் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப மட்டுமே விதிவிலக்குகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவத்தின் அறிவிப்பை அமெரிக்கவாழ் சீக்கியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க ராணுவத்தில் இனி மேல் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் இணைவார்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
சீக்கிய மத வழக்கத்தின்படி கடா எனப்படும் இரும்பிலான கையணி, கங்கா எனப்படும் மரத்திலான சீப்பு ஆகியவற்றை வைத்திருக்க அமெரிக்க ராணுவம் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து சீக்கியர் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.