Published : 12 Nov 2013 10:45 AM
Last Updated : 12 Nov 2013 10:45 AM

ஹையான் புயல்: லட்சக்கணக்கானோர் உணவின்றி தவிப்பு

பிலிப்பைன்ஸில் ஹையான் புயலால் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து ஆதரவற்ற நிலையில் பசியால் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு தேவையான குடிநீர், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்குவதற்காக கடுமையாக போராடி வருகின்றனர் மீட்புக்குழுவினர்.

மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் ஹையான் புயல் பிலிப்பைன்ஸின் லெய்டே மற்றும் சமர் ஆகிய மாகாணங்களை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கியது. மணிக்கு 315 கி.மீ. வேகத்தில் வீசியதில் லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புயல் காரணமாக வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவிப்பவர்களுக்குத் தேவையான உணவுப்பொருள், குடிநீர், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் பணியில் முழு வீச்சில் ஈடுப்பட்டுள்ளனர் மீட்புக் குழுவினர்.

லெய்டே மாகாணத்தின் டக்ளோபான் நகரில் உள்ள விமான நிலையம் புயலால் இடிந்து தரைமட்டமானது. அப்பகுதியில் குடிநீர், உணவுப் பொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மீட்புக் குழுவினரால் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களுக்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் கடுமையான பசியுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, டக்ளோபானில் புயலால் சேதமடைந்த கடைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள பொருள்களை சிலர் சூறையாடி வருகின்றனர். இதைத் தடுக்கும் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் போலீஸுக்கு உதவுவதற்காக 100 ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ராமன் ஜகலா தெரிவித்தார்.

"பொருட்களை சூறையாடுவது கவலை அளிக்கிறது" என பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்வினோ தெரிவித்தார்.

"குடிநீரும் காயத்துக்கு மருந்தும் தேவைப்படுகிறது. அதைப் பெற்றுத் தர நீங்கள் ஏற்பாடு செய்வீர்களா? எங்களை வெறுமனே பார்ப்பதற்கு வருபவர்களை அனுமதிக்காதீர்கள்" என ஜோன் லும்ப்ரி வில்சன் (பாதிக்கப்பட்டவர்) தெரிவித்தார்.

மேலும் ஒரு காற்றழுத்தம்

இதற்கிடையே மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தென் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இது மின்டனாவ் பகுதியைத் செவ்வாய்க்கிழமை தாக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இது மீட்புப் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

அமெரிக்க ராணுவம் விரைவு

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸுக்கு உதவுவதற்காக ராணுவமும், மீட்பு வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் கர்னல் பிராட் பர்டெல்ட் கூறுகையில், "புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காக ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும், 3-வது கடற்படை பிரிகேடைச் சேர்ந்த 90 வீரர்கள் மற்றும் மாலுமிகள், முதலாவது போர் விமானப் பிரிவைச் சேர்ந்த கேசி-130ஜே ஹெர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்களை அனுப்பி வைத்துள்ளதாக கர்னல் ஜான் பெக் தெரிவித்தார்.

ஒபாமா இரங்கல்

ஹையான் புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது மனைவியும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் "புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என கூறப்பட்டுள்ளது.

வியட்நாமில் கரையைக் கடந்தது ஹையான் புயல்

பிலிப்பைன்ஸைப் புரட்டிப் போட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய ஹையான் புயல், வியட்நாமில் திங்கள்கிழமை காலை கரையைக் கடந்தது.

இதுகுறித்து அமெரிக்க கூட்டு புயல் எச்சரிக்கை மையம் (ஜேடிடபிள்யூசி) கூறுகையில், "வியட்நாம் தலைநகர் ஹனோய் நகருக்கு தென்கிழக்கில் 160 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஹையான் புயல் கரையைக் கடந்தது" என தெரிவித்தது.

கடந்த வார இறுதியில் பிலிப்பைன்ஸில் பேரழிவை ஏற்படுத்திய ஹையான் புயல், அங்கிருந்து வியட்நாம் நோக்கி நகர்ந்தது. அது திங்கள்கிழமை காலை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. புயல் கரை கடந்தபோது பலத்த மழையுடன் காற்று வீசியது என ஜேடிடபிள்யூசி கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியட்நாமின் கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த சுமார் 6 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதாக அந்நாட்டு வெள்ளத் தடுப்பு மற்றும் புயல் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை புயலின் பாதை மாறியதால் வடக்கு மாகாணங்களின் கடற்கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 52 ஆயிரம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

புயல் தாக்கும் என்ற அச்சம் காரணமாக பெரும்பாலானவர்கள் உணவுப் பொருள்களை போதுமான அளவுக்கு வாங்கி இருப்பு வைத்திருந்தனர். பள்ளிக்கூடங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது.

ஹையான் புயலின் பாதை மாறியதால், அதன் பாதிப்பு 9 மாகாணங்களிலிருந்து 15 மாகாணங்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக செஞ்சிலுவை அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாகாணங்களில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புயல் குறித்து தாமதமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x