

தீவிர இயற்கைப் பேரிடர் ஏற்படின் அதனை முறையாக நிர்வகித்து மேலாண்மை செய்வதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் இந்தியா 77-வது இடத்தில் உள்ளது. இதில் மிக மோசமாகத் திகழும் முதல் 5 நாடுகளில் வங்கதேசம் உள்ளது. பாகிஸ்தான் 72-வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தானை ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை சற்றே உயர்வானது. வனுவாத்து தீவு பேரிடர் குறியீட்டில் 2016-ம் ஆண்டில் ஒன்றாம் இடத்தில் உள்ளது. மிகப்பெரிய பேரிடர் குறியீட்டில் இருப்பது வனுவாத்து தீவு.
ஐநா சுற்றுச்சூழல் மற்றும் மானுட பாதுகாப்பு பல்கலைக் கழகம் உலக இடர்பாடு அறிக்கை 2016 என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதாவது இயற்கை பேரிடர் மற்றும் அதனை கையாளும் விதத்தில் ஏற்படும் சமூக ரீதியான பாதிப்புகள் என்ற அளவில் 171 நாடுகளை மதிப்பீடு செய்துள்ளது.
இயற்கை பேரிடர் ஏற்படுவதிலிருந்து எந்த நாடும் தப்ப முடியாது, ஆனால் அதனால் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்ட சேதங்களை தவிர்ப்பதற்கான உள்கட்டமைப்பு, மற்ற வசதிகள், நடைமுறைகள், வலுவான நிர்வாகத் திறமைகளின்மை ஆகியவையால் இயற்கை நிகழ்வை பேரிடராக மாற்றிவிடுகிறது என்கிறது இந்த அறிக்கை.
இதனை விளக்கிய உலக பேரிடர் அறிக்கை திட்ட மேலாளர் பீட்டர் முக், “தீவிரமான இயற்கை சீற்றங்களின் போது மீட்பு உள்ளிட்ட உதவி நடவடிக்கைகளில் சவால் நிறைந்தது உதவிச் சங்கிலியில் கடைசி இடத்தில் இருக்கும் சேதமடைந்த தெருக்கள் அல்லது மிகப்பெரிய பாலங்கள் என்று வரும்போது மக்களை வெளியேற்ற போதுமான போக்குவரத்து வாகன வசதி, எங்கு குடிநீர், உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படுகிறதோ இவற்றை உறுதி செய்யும் துரித நடவடிக்கைகள் ஆகியவை சவால் நிறைந்தவை.
உடைந்து விழும் சாலைகள், பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பங்கள், கிரிட்டுகள், இடிந்து விழுந்து விழும் நிலையிலான பலவீனமான கட்டிடங்கள் ஆகியவை உள்நாட்டு உதவிக்குழுக்களுக்கு மட்டுமல்ல அயல்நாட்டு உதவிக்குழுக்களுக்கும் சவால் ஏற்படுத்தக்கூடியவை என்பதோடு மீட்பு நடவடிக்கைகள் தாமதமாவதால் உயிர்ப்பலிகள் அதிகரிக்கும் அபாயம் கொண்டது.
எனவே சர்வதேச நாடுகள் பேரிடர் நிகழ்வதற்கு முன்பாகவே இத்தகைய முன் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும்.
உயர்தர உள்கட்டமைப்புகளை நன்றாக நிர்வகிக்கும் போது பேரிடரின் மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, வெள்ளம், புயல், பூகம்பம் நிகழ்ந்த பிறகு மனிதார்த்த உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை விரைவில், எளிதில் சென்றடையுமாறு இருக்க வேண்டும். இதன் மூலம் பொருளாதார இழப்புகள், மானுட இழப்புகளைத் தவிர்க்கலாம்” என்றார்.