

சிரியாவில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ரசாயன வாயு தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத் படைக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது செவ்வாய்க்கிழமை அரசுப் படை போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின. அப்போது ரசாயன வாயு குண்டுகள் வீசப்பட்டன. இதில் 11 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிரிழந்தனர். நச்சு வாயுவை சுவாசித்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை அங்கு முகாமிட்டு நேரடியாக போரில் ஈடுபட்டு வருகிறது. எனவே சிரியா அரசு படை போர் விமானம் அல்லது ரஷ்ய போர் விமானங்கள் ரசாயன குண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபை விசாரணை நடத்த வேண்டும் என்று சிரியாவின் எதிர்க்கட்சியான தேசிய கூட்டணி வலியுறுத்தியுல்ளது.
இதற்கிடையில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாக்குதலில் வீரியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகும் இட்லிப் மாகாணம்:
இட்லிப் மாகாணம் அல் குவைதா ஆதரவு அமைப்பான ஃபதே அல் ஷாம் முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி ரஷ்ய விமானங்களும், அமெரிக்க கூட்டுப்படைகள் விமானமும் தாக்குதல் நடத்துவது வழக்கம்.
அண்மையில் ஹமா மாகாணத்தில் அதிபர் பஷார் அல் அசாத் ஆதரவுப் படைகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்துள்ள தாக்குதலை அரசே நடத்தியிருக்க வேண்டும் என எதிர்தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.