பிரிட்டனில் ஜூன் 8-ல் பொதுத்தேர்தல்: பிரதமர் தெரசா மே அறிவிப்பு

பிரிட்டனில் ஜூன் 8-ல் பொதுத்தேர்தல்: பிரதமர் தெரசா மே அறிவிப்பு
Updated on
1 min read

பிரிட்டனில் முன்கூட்டியே வரும் ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்கலாமா, வெளி யேறலாமா என்பது குறித்து கடந்த 2016 ஜூனில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பிரெக்ஸிட் என்றழைக்கப்பட்ட இந்தத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற ஆதரவு அளித்தனர்.

பிரிட்டனில் தற்போது கன்வர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரெக்ஸிட் விவகாரத்தில் ஆளும் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு நிலவியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அன்றைய பிரதமர் டேவிட் கேமரூன், தேர்தல் முடிவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரிட்டனின் புதிய பிரதமர் தெரசா மே பதவியேற்று பிரெக்ஸிட் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தார். இந்நிலையில் வரும் ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அவர் நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக லண்டனில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரெக்ஸிட் நடவடிக்கை களுக்கு எதிர்க்கட்சிகள் இடையூறு விளைவித்து வருகின்றன. இதனால் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வலுவான அரசு அவசியம். மக்களின் தீர்ப்பு முக்கியம்.

எனவே வரும் ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்த அமைச்சரவை முடிவு செய் துள்ளது. இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்படும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரிட்டன் பொதுத்தேர்தல் வரும் 2020-ம் ஆண்டில் நடைபெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே தற்போது தேர்தல் நடைபெற உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in