

பஞ்சாப், பதான்கோட் இந்திய விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பின் உறுப்பினர்கள் பலரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
மேலும், ஜெயிஷ் அமைப்பின் அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மேலும் விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கூட்டிய உயர்மட்ட கூட்டத்தில் ராணுவ தளபதி ரஹீல் ஷரீப் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு முடிவெடுத்துள்ளனர்.
மேலும், இந்தியாவுடன் ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட விசாரணையை தொடங்க பதான்கோட்டுக்கு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றையும் அனுப்ப பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறது.
ஜெயிஷ்-இ-முகமது அமைப்பினர் கைது குறித்த பாகிஸ்தான் செய்தி அறிக்கை:
பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் உயர்மட்ட கூட்டம் கூட்டப்பட்டு நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள், பஞ்சாப் முதல்வர், அயலுறவு ஆலோசகர், லாகூர் போலீஸ் கமாண்டர், உளவு அமைப்பின் தலைமை இயக்குநர், மற்றும் பிற மூத்த சிவில், ராணுவ, போலீஸ் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பயங்கரவாதத்தை பாகிஸ்தானிலிருந்து களையும் முயற்சியாக நாட்டை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் தேசிய உறுதி ஏற்பட்டுள்ளது என்றும் பதான்கோட் தாக்குதல் குறித்த விசாரணையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் இந்த கூட்டம் திருப்தியுடன் கவனத்தில் கொண்டது. பதான்கோட் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வசம் இருந்த தொடக்க தகவல்கள் மற்றும் வழங்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பின் அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன.
மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு உணர்வுடன் மேலும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதால், பதான்கோட்டுக்கு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அனுப்பவும் பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக இந்தியாவிடமிருந்து ஆலோசனைகளை பெறவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.