முடிவுக்கு வந்தது நிர்வாக முடக்கம்: மசோதாவில் ஒபாமா கையெழுத்து

முடிவுக்கு வந்தது நிர்வாக முடக்கம்: மசோதாவில் ஒபாமா கையெழுத்து
Updated on
1 min read

16 நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க நிர்வாக நெருக்கடி முடிவுக்கு வந்தது. நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதா நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில்,கெடு முடிவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க மேலவை.

ஆளும் ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியும் நிதி நெருக்கடியைத் தீர்க்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2014- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவை நிறைவேற்ற குடியரசு கட்சி உடன்பட்டுள்ளது. கடனுக்கான உச்சவரம்பு 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்களாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

இதனால், கடந்த 16 நாட்களாக மூடப்பட்டிருந்த அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடி ஏன்?

அமெரிக்காவில்,அக்டோபர் 1-ல் நிதியாண்டு தொடங்கிய நிலையில் புதிய பட்ஜெட்டுக்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், அரசு செலுவுகளை சந்திக்க நிதிபற்றாக்குறை ஏற்பட்டதால், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஊதியம் இல்லாத விடுப்பில் செல்ல நேரிட்டது.

மேலும், அக்டோபர் 17-ம் தேதிக்குள் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பும் உயர்த்தப்பட வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா கடும் நிதிநெருக்கடியை சந்திக்கும் சூழலும் ஏற்பட்டது.

அமெரிக்க நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காண எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு கட்சிகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்த சிக்கலுக்கு தீர்வு எட்டப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in