

அவசர இருதய சிகிச்சைப் பெற இந்தியா வருவதற்காக பாதிக்கப்பட்ட 2 மாதகால குழந்தை மற்றும் அவரது குடும்பத்துக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் விசாக்களை வழங்கியது.
இதற்காக பாகிஸ்தான் குடிமகனும், குழந்தையின் தந்தையுமாகிய கென் சித் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் சமூக வலைத்தளம் மூலம் முறையீடு செய்தார். இதற்கு சமூக வலைத்தளவாசிகளிடமும் கருணை பிறக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “குழந்தை நலம் பாதிக்கப்படக்கூடாது” என்று கூறி விசா வழங்க ஏற்பாடுகள் செய்தார்.
இது குறித்து குழந்தையின் தந்தை கென் சித் ட்விட்டரில், “என்னுடைய குரலைக்கேளுங்கள் மேடம். என் 2 மாதகால குழந்தைக்காக எனக்கு அவசர விசா தேவைப்படுகிறது” என்று முறையிட்டார்.
இதற்கு சுஷ்மா, “குழந்தை பாதிக்கப்படக்கூடாது, உடனே இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் மருத்துவ விசா தருகிறோம்” என்று பதில் அளித்தார்.
கென்னின் முறையீட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவு குவிந்தது.
இந்நிலையில் விசா கிடைத்த கென் சித், “பல வேறுபாடுகளுக்கிடையே மனித நேயம் காக்கப்படுவது மனதுக்கு இதமாக உள்ளது. நன்றி, கடவுளின் ஆசீர்வாதம். மனிதநேயம் வெல்லும்” என்று கூறியுள்ளார்.
2015-ம் ஆண்டு பாகிஸ்தானின் 5 வயது குழந்தைக்கு இந்தியாவில் லிவர் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.