Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM

ராணுவ வீரர்களுக்கு இணையதளத்தில் வாக்குச்சீட்டு: இந்தியத் தேர்தல் ஆணையம் பரிசீலனை

ராணுவ வீரர்களுக்காக இணைய தளத்தில் வாக்குச்சீட்டை பதிவிறக்கம் செய்யும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இத்திட்டம் முதல் முறையாக அறி முகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங் டனில் உள்ள இந்திய தூதரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி யில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ராணுவ வீரர்களுக்காக இணையதளத்தில் வாக்குச்சீட்டை பதிவிறக்கம் செய்து அதில் வாக்கைப் பதிவு செய்து விரைவு அஞ்சல் மூலம் அனுப்பும் யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார். இப்போதுள்ள நடைமுறைகளின்படி ராணுவ வீரர்களுக்கு அஞ்சல்மூலம் தபால் ஓட்டுகள் அனுப்பப்படுகின்றன. வீரர்கள் தங்கள் வாக்கைப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு மீண்டும் அஞ்சல் மூலம் அனுப்புகின்றனர்.

இதனால் நேர விரயம் அதிகரிக்கிறது. இணையதளத்தில் வாக்குச்சீட்டை பதிவிறக்கம் செய்வது மூலம் ஒருவழி பயண நேரம் குறையும். மேலும் விரைவு அஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த நேரத்தில் தபால் வாக்குகள் தேர்தல் ஆணையத்துக்கு வந்து சேரும்.

இந்தத் திட்டம் தொடர்பாக துணை ராணுவப் படை அமைப்புகளின் மூத்த அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப். படைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதிய முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து ராணுவ படைப் பிரிவுகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

இணையதள வாக்குப்பதிவு அமலாகுமா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையதளம் மூலம் தங்கள் வாக்கைப் பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுமா என்று கேட்டபோது. வி.எஸ் சம்பத் கூறியது:

இணையதளம் மூலம் வாக்கு களைப் பதிவு செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்றால் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இப்போதைய நிலையில் இணையதள வாக்குத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

வருங்காலத்தில் இணையதளம் மூலம் நம்பகமான முறையில் வாக்களிக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டால் அத்திட்டத்தை செயல்படுத்துமாறு மத்திய அரசிடம் கோரப்படும் என்றார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க முடியாது. அவர்கள் வாக்களிக்க விரும்பினால் தங்களது சொந்த ஊருக்கு வந்து மட்டுமே வாக்களிக்க முடியும். மொத்தம் 11,000 வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x