Published : 05 Oct 2014 12:38 PM
Last Updated : 05 Oct 2014 12:38 PM

உலக மசாலா: 40 ஆண்டுகள் குடலில் இருந்த ஊசி

சீனாவில் லிங்ஷன் தீவில் உள்ள சிறிய கடற்கரைப் பகுதிக்குச் சொந்தக்காரர் ஜியாவோ யங்ஷெங். அவருடைய அழகான வீட்டைப் புதுப்பிக்க பல வழிகளில் யோசித்தார். இறுதியில் கடற்கரையில் கிடைக்கும் சிப்பிகள் மூலம் வீட்டை அலங்கரிக்க முடிவு செய்தார். இரண்டாண்டுகளில் வீட்டுக் கூரை, சுவர், தூண் போன்றவற்றைப் பல்வேறு விதமான சிப்பிகளால் அலங்கரித்துவிட்டார். நடுநடுவே பெரிய சங்குகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அழகான இந்த வீடு, இப்பொழுது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வதால், சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது!

ம்ம்… ஜியாவோ, உங்க ஐடியா ரொம்பப் புதுசாத்தான் இருக்கு!

நிகோலா டெஸ்லா எலக்ட்ரிகல் இன்ஜினீயர், கண்டுபிடிப்பாளர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஓர் ஓவியத்தை உருவாக்கியிருக்கிறார் பில் ஹன்சென். இது வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியமல்ல. இரண்டு மின்சார வயர்களை பேட்டரியில் இணைக்கும்போது உருவாகும் தீப்பொறியை வைத்து, டெஸ்லாவின் உருவத்தை வரைந்திருக்கிறார்! தீப்பொறி மூலம் இவ்வளவு அழகான ஓவியத்தைக் கொண்டுவர முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது!

எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங் துறையின் முன்னோடியான டெஸ்லாவுக்கு அளிக்கப்பட்ட மரியாதை மெய்சிலிர்க்குது!

60 வயது ஜுலாங் சமீப காலமாக வயிற்று வலியில் துடித்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சாதாரண வலி என்று நினைத்த மருத்துவர்கள், எக்ஸ்ரே எடுத்த பிறகு அதிர்ந்து போனார்கள். அவருடைய வயிற்றில் அக்குபங்சர் ஊசி இருந்திருக்கிறது. 40 வருடங்களுக்கு முன் ஜு லாங் வயிற்று வலிக்காக அக்குபங்சர் மருத்துவம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஓர் அங்குலம் அளவுள்ள ஊசி அவரது உடலுக்குள் ஒடிந்து விழுந்துவிட்டது. நாற்பதாண்டுகளாக வயிற்றுக்குள்ளேயே பயணம் செய்த ஊசி, இப்போது குடலுக்குள் வந்ததால் வலி ஏற்பட்டிருக்கிறது. துருப்பிடித்துப் போன ஊசியை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

ஒரு பிரச்சினைக்காக டாக்டரிடம் வந்தால், இன்னொரு பெரிய பிரச்சினையைக் கொண்டு வந்துடறீங்களே… இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x