போலி பாஸ்போர்ட் பயணி தீவிரவாதி இல்லை: மலேசிய போலீஸார் தகவல்

போலி பாஸ்போர்ட் பயணி தீவிரவாதி இல்லை: மலேசிய போலீஸார் தகவல்
Updated on
1 min read

நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 2 பேர் தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மலேசிய போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. இதுகுறித்து அந்த நாட்டு காவல் துறைத் தலைவர் அபுபக்கர் கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரான் நாட்டைச் சேர்ந்த பவுரியா நூர் முகமது மெஹர்தாத் (19) என்பவர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளார். அவருக்கும் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. ஜெர்மனியில் குடியேற அவர் சட்டவிரோதமாக போலி பாஸ்போட்டில் விமானத்தில் ஏறியுள்ளார். கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் பிராங்க்பர்ட் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். இதுதொடர்பாக ஜெர்மனியில் வசிக்கும் அவரது தாயாரிடமும் விசாரணை நடத்தியுள்ளோம்.

அவருடன் பயணம் செய்த மற்றொரு நபர் காசம் அலி என்று தெரியவந்துள்ளது. ஈரானை சேர்ந்த அவர் மெஹர்தாத்தின் நண்பராக இருக்கலாம் என்றும் அவரும் ஜெர்மனியில் குடியேற திட்டமிட்டு சென்றிருக்கலாம் என்றும் தெரிகிறது. அவரைக் குறித்த முழுமையான விவரங்களைத் திரட்டி வரு கிறோம் என அபுபக்கர் தெரிவித்தார்.

அலிக்கு டிக்கெட் முன்பதிவு செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கூறியபோது, போலி பாஸ்போர்ட்டில் சென்ற அலி தீவிரவாதியாக இருக்க முடியாது. அவர் பெய்ஜிங் செல்ல டிக்கெட் கேட்கவில்லை. ஐரோப்பாவுக்கு செல்லதான் டிக்கெட் கேட்டார். அதுவும் மிகக் குறைந்த விலை டிக்கெட் வேண்டும் என்று கோரினார் என்றார். போலி பாஸ்போர்ட்டில் சென்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவரும் தீவிரவாதிகள் இல்லை என்று மலேசிய போலீஸார் கூறி னாலும் தாய்லாந்து போலீஸார் தொடர்ந்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

தாய்லாந்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி இருவரும் விமானத்தில் சென்றுள்ளனர். இதனிடையே விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் பின்னணி குறித்தும் மலேசிய போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஐந்து இந்தியர்கள் உள்பட சுமார் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் இருந்தனர். எனவே அந்தந்த நாட்டு போலீஸாருடன் மலேசிய போலீஸார் தொடர்பு கொண்டு தகவல்கள் திரட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in