Published : 21 Oct 2014 10:24 AM
Last Updated : 21 Oct 2014 10:24 AM
பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் நாடு திரும்பவேண்டும் என்று பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் (பி.டிஐ.) கட்சித் தலைவர் இம்ரான்கான் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவிவிலக வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றம் முன் கடந்த ஆகஸ்ட் 14 முதல் இம்ரான்கான் போராட்டம் நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் இம்ரான்கான் பேசுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இம்ரான்கான் பேசும்போது, “பழமைவாதிகளின் அட்டூழியம் காரணமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறிய இந்துக்கள் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் நாடு திரும்புவார்கள் என நம்புகிறேன்.
சிறுபான்மை இந்துக்களும் கலாஷ் சமூகத்தினரும் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதற்கு வருந்துகிறேன். இவ்வாறு கட்டாயப்படுத்தப்படுவது இஸ்லாமிய உணர்வுகளுக்கு எதிரானது. முஸ்லிம்கள் நன்னடத்தை மூலமே இஸ்லாம் மதத்தை பரப்பவேண்டும். அச்சுறுத்தி அல்ல.
நாட்டின் தந்தை முகமது அலி ஜின்னாவின் தொலைநோக்குப் பார்வையின்படி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, நீதி, சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களை நாம் அதிகாரம் பெறச்செய்வோம்” என்றார்.
இம்ரான்கான் கட்சி கான்ஸ்ட்டிடியூஷன் சாலையில் சிறுபான்மையினர் தினத்தையும் கொண்டாடியது. இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இதில் பங்கேற்றனர். தீபாவளி பண்டிகையையும் இந்துக்களுடன் இம்ரான் கட்சி கொண்டாடியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT