

சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு ஓர் ஆண்டு காலமாகும் என்றும், அதற்கு 1 பில்லியன் டாலர் செலவாகும் என்றும் அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அஸாத் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதிகள் ஆதிக்கப் பகுதியில் இருந்து ரசாயன குண்டுகளை தாங்கிய ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருப்பது ரஷிய செயற்கைக்கோள் பதிவில் நிரூபணமாகியுள்ளது. இந்தக் காரணத்தால்தான், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில்கூட யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை நாங்கள் வீசவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், ஃபாக்ஸ் செய்தி சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் மேலும் கூறியது:
“டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் ஆகஸ்ட் 21-ல் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் “சரின்” வாயு பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகப் போராடி வரும் பயங்கரவாதிகள்தான் அந்தத் தாக்குதலை நடத்தினர். அதற்கான ஆதாரம் உள்ளது. பயங்கரவாதிகள் ஆதிக்க பகுதியில் இருந்து ரசாயன குண்டுகளை தாங்கிய ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருப்பது ரஷிய செயற்கைக்கோள் பதிவில் நிரூபணமாகியுள்ளது.
இந்த காரணத்தால்தான், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில்கூட யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடவில்லை. வெறும் வீடியோ ஆதாரத்தை வைத்து அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்கத்தக்கதல்ல. இணையதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் போலியாக பல்வேறு காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
“சரின்” வாயுவை சமையல் அறை வாயு என்றே அழைக்கின்றனர். யார் வேண்டுமானாலும் சமையல் அறையிலேயே அந்த ரசாயன வாயுவை உற்பத்தி செய்ய முடியும். இதுதவிர பயங்கரவாதிகளுக்கு பல்வேறு அரசுகள் உதவி செய்கின்றன. அவர்கள்கூட பயங்கரவாதிகளுக்கு ரசாயன ஆயுதங்களை அளித்திருக்கலாம். இந்தப் பின்னணியில் ரசாயன தாக்குதலை நடத்தியது பயங்கரவாதிகள்தான் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியும்.
அமெரிக்கா, ரஷியா இடையே எட்டப்பட்ட உடன்பாட்டை முழுமனதுடன் நிறைவேற்றுவோம். எங்களிடம் உள்ள ரசாயன ஆயுதங்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம். அந்த ஆயுதங்களை அழிக்க ஓராண்டு வரை ஆகும்” என்று அவர் கூறினார்.