

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதும் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவில் பணியாற்றிய ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேரை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அண்மையில் வெளியேற்றினார்.
அதற்குப் பதிலடியாக ரஷ்யா வில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை அந்த நாட்டு அதிபர் புதின் வெளியேற்றவில்லை. இதனை வரவேற்ற ட்ரம்ப், அதிபர் புதின் புத்திசாலி, அவரது நிதானம், பொறுமையைப் பாராட்டுகிறேன் என்று புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், மாஸ்கோவில் நேற்று கூறியதாவது:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் அவர்கள் சந்தித்துப் பேசக்கூடும். அதற்கு முன்பாகவே இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.