

நிலவில் காலடி எடுத்து வைத்த இறுதி விண்வெளி வீரர் அமெரிக்காவின் ஜின் செர்னன் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.
ஜின் செர்னன் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜின்னின் மரணம் குறித்து நாசா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "82 வயதிலும் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்த தனது கனவுகளை நாட்டின் தலைவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் பகிர்ந்து வந்தவர் ஜின் செர்னன்" என்று தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
செர்னன் 1972-ம் ஆண்டு, அமெரிக்காவால் நிலவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு செலுத்தப்பட்ட ‘அப்பலோ 17’ விண்கலத்துக்கு தளபதியாக இருந்தவர். நிலவில் கடைசியாக காலடி வைத்த நபர் ஜின் செர்னன் ஆவார்.
நிலவில் காலடி வைத்த அனுபவம் குறித்து கடைசியாக செர்னன் 2007ஆம் ஆண்டு நினைவு கூறும்போது, "ஏணியின் மீது ஏறிய அடிகள் மிகக் கடுமையானதாக இருந்தன. நிலவில் நான் காலடி வைத்தது, எனது வாழ்வின் மிக பிரகாசமான தருணம் ஆகும்.
அந்தத் தருணத்தை நீங்கள் நிறுத்தி, உங்கள் இல்லத்துக்கு கொண்டு செல்ல நினைப்பீர்கள். ஆனால் அது முடியாது" என்று கூறினார்.
நிலவில் முதலில் காலடி எடுத்த வைத்த அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் 2012-ம் மரணமடைந்தது நினைவுகூரத்தக்கது.