

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான ஏ380 சூப்பர் ஜம்போ ஏர் பஸ் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதனுள் காற்றழுத்தம் குறைந்ததால் அசர்பெய்ஜானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:
ஏ380 ரக ஏர் பஸ் விமா னம், 467 பயணிகள் மற்றும் 27 ஊழியர்களுடன் லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு (21.03 ஜிஎம்டி) புறப் பட்டது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது, ஆக்ஸிஜன் அழுத்தம் குறைந்தது. இதையடுத்து, உடனடியாக பயணிகளுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கப்பட்டது. பின்னர் அசர்பெய்ஜானில் உள்ள பகு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக சிங்கப்பூரி லிருந்து வேறு விமானம் வரும் வரை அங்குள்ள ஹோட்டலில் அவர்களை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து, அந்த விமானத் தில் பயணம் செய்த மேத்யூ ஜி.ஜான்சன் பேஸ்புக்கில் கூறுகையில், "லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் முன் பகுதியிலிருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதுகுறித்து ஊழியரிடம் கேட்டபோது, கதவிலிருந்து சத்தம் வந்ததாக தெரிவித்தார்.
இந்த சத்தம் கேட்ட சில மணி நேரத்துக்குப் பிறகுதான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது" என்றார். இந்த தகவலுடன் விமானத்துக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.