அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை

அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
Updated on
1 min read

லெக்கின்ஸ் அணிந்த இளம்பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனம் தடை விதித்தது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

கடந்த 26-ம் தேதி அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து மினியாபொலிஸ் நகருக்கு செல்ல 2 இளம்பெண்கள் வந்தனர். இருவரும் லெக்கின்ஸ் அணிந்திருந்தனர். இதேபோல ஒரு சிறுமியும் லெக்கின்ஸ் அணிந்திருந்தார். 3 பேரும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்துக்காக காத்திருந்தனர்.

மூவரும் லெக்கின்ஸ் அணிந்திருந்ததால் அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய விமான ஊழியர்கள் மறுத்துவிட்டனர். சிறுமி மட்டும் உடனடியாக உடையை மாற்றிவிட்டு அதே விமானத்தில் பயணம் செய்தார். மற்ற 2 பெண்களும் லெக்கின்ஸை மாற்றிவிட்டு அடுத்த விமானத்தில் மினியாபொலிஸ் நகருக்குச் சென்றனர்.

இந்த விவகாரம் அமெரிக்க சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. ஹாலிவுட் நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவன ஊழியரின் விருந்தினர் என்ற வகையில் 2 பெண்களுக்கும் இலவச விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன. அது விருந்தினர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில்தான் லெக்கின்ஸ் உடையை மாற்ற கோரினோம். வாடிக்கையாளர்கள் லெக்கின்ஸ் அணிந்து வரலாம். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

இவ்வாறு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in