

பாகிஸ்தான் டிவி சேனல்கள், இந்திய சினிமா படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என லாகூர் உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கட்டுப்பாடு விதித்தது.
இந்தியா விஷயத்தில் இந்த கட்டுப் பாட்டை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி காலித் முகம்மது கான், பிற வெளிநாடுகள் விஷயத்திலும் இதனை கவனத்துடன் பின்பற்றும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். இதனிடையே, இந்தக் கட்டுப்பாடு திரைப்பட விநியோகஸ்தர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
நீதிபதி காலித் முகம்மது கான் இது தொடர்பாக தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:
வெளிநாடுகளில் தயாரான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இடைக்கால தடை விதிக்கப் படுகிறது. தற்போது அமலில் உள்ள இரு தரப்பு வர்த்தக நிர்வாக நடைமுறைகளின்படி எதிர்மறைப் பட்டியலில் இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் டிசம்பர் 12ம் தேதி இது பற்றி பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் தொலைக்காட்சி கட்டுப்பாட்டு ஆணையமும் விரிவான பதில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றார் நீதிபதி காலித்.
இந்திய எதிர்ப்பு மனப்பான்மை கொண்டவரான முன்னாள் திரைப்பட தயாரிப்பாளர் முபாஷிர் லுக்மான் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பாகிஸ்தானில் அமலிலுள்ள கட்டுப்பாடுகளை மீறி இந்திய திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் இறக்குமதி செய்யப்படுவதாக, தான் தாக்கல் செய்த மனுவில் லுக்மான் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் சட்டம் அனுமதிக்கவில்லை. இருப்பினும் இந்தியா, பிற வெளிநாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள், டிவி தொடர்களை 2006ல் பிறப்பித்த ஒழுங்குமுறை ஆணையின் மூலம் இறக்குமதி செய்யவும் அவற்றை ஒளிபரப்பவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று லுக்மான் தரப்பு வழக்கறிஞர் விசாரணையின்போது வாதிட்டார். ஒழுங்குமுறை ஆணை செல்லாது இது பாகிஸ்தான் இறக்குமதி கொள்கைக்கு எதிரானதும் என்றும் தெரிவித்தார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் எதிர் மறைப்பட்டியலில் உள்ள நிலையில், அந்த பட்டியலை ஒழுங்குமுறை உத்தரவு மூலம் மாற்றி அமைக்க முடியாது என்றார் நீதிபதி.
இந்த உத்தரவை பாகிஸ்தான் திரைப்பட ரசிகர்களும் திரைப்பட விநியோகஸ்தர்களும் ஆட்சேபித்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரைப்படங்களை நம்பியே பாகிஸ்தான் திரைப்படத்தொழில் துறை நிலைக்க முடிகிறது. திரைப்படங்களை இறக்குமதி செய்வதால்தான் திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வந்து திரைப்படங்களை பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்திய திரைப்படங்கள், டி.வி. தொடர்கள் திரையிடப்படுவதை கடுமையாக எதிர்க்கும் பாகிஸ்தான் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இந்திய திரைப்படங்கள், டிவி தொடர்களால் நாட்டின் திரைத்துறையும் டிவி தொழிலும் நசிவடைவதாகவும் கூறுகின்றனர்.
இந்திய திரைப்படங்களை திரையிட கடந்த மாதம் லாகூர் உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்திய திரைப்படங்களை வெளியிடுவதற்கு சில நிபந்தனைகளை விதித்து இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது.
1965ம் ஆண்டு போருக்குப் பிறகு இந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தான் தடை விதித்தது. ஆனால் சட்டத்துப் புறம்பாக நகலெடுக்கப்பட்ட திரைப்பட பிரதிகள் பாகிஸ்தானில் அமோக விற்பனையாகின. 2006ல் ராணுவ ஆட்சியாளராக இருந்த பர்வீஸ் முஷாரப், திரைப்படங்களை இறக்குமதி செய்வதற்கு இருந்த தடையை தளர்த்தி உத்தரவிட்டார்.
நீதிமன்றம் என்னதான் உத்தரவு பிறப்பித்தாலும் இந்தியா மற்றும் துருக்கி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பு செய்வதை பாகிஸ்தான் சேனல்கள் நிறுத்துவதில்லை. இந்தியா, துருக்கி டிவி தொடர்கள் அனைத்தும் பாகிஸ்தானில் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.