

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20-ம் தேதியன்று பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு நிகழ்வை ட்விட்டர் நிறுவனம் நேரலையாக ஒளிபரப்ப உள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை ட்விட்டர் தன் பதிவில், ''ட்விட்டர் மற்றும் நியூஸ்ஹவர் இணைந்து ட்ரம்ப் பதவியேற்பை நேரலையாக ஒளிபரப்ப உள்ளோம்'' என்று கூறியுள்ளது.
சிஎன்ஈடியின் அறிக்கைப்படி, அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா ஆறு மணி நேரம் நடக்கவுள்ளது. இதில் அமெரிக்க புதிய அதிபராக ட்ரம்ப் மற்றும் துணை அதிபராக மைக் பென்ஸ் இருவரும் பதவியேற்கின்றனர். மேலும் ஏராளமான செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் உரையாற்ற உள்ளனர்.
அறிக்கையில் நியூஸ்ஹவரின் நிர்வாக தயாரிப்பாளர் கூறும்போது, ''பதவியேற்பு விழாவை ட்விட்டரில் அமெரிக்கர்களும், ஒட்டுமொத்த உலகமும் காண முடியும்'' என்றார்.
சமீபத்தில் நடந்த ட்ரம்ப் - செய்தியாளர்கள் சந்திப்பில் ட்விட்டர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.