வட கொரியா பிடியில் இருந்த அமெரிக்கர் விடுதலை

வட கொரியா பிடியில் இருந்த அமெரிக்கர் விடுதலை
Updated on
1 min read

வட கொரியாவால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் போர் வீரர் மெரில் நியூமேன் (85) விடுதலை செய்யப்பட்டார்.

வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “அரசு விரோத நடவடிக்கைகளுக்காக காவலில் வைக்கப்பட்டிருந்த நியூமேன் 1950 – 53 கொரியப் போரில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். எனவே அவரது வயது, உடல்நிலை கருதி மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த நியூமேன், விடுதலையை தொடர்ந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றார். அங்கு சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்துக்காக நேற்று காத்திருந்தார். பெய்ஜிங் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “நான் நலமாக இருக்கிறேன். வீட்டுக்குச் செல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது மனைவியை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

நியூமேன் விடுதலையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் கூறுகையில், “நியூமேன் வட கொரியாவை விட்டு வெளியேறவும் அவர் தனது குடும்பத்துடன் சேரவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை வரவேற்கிறோம்” என்றார்.

தற்போது தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் கூறுகையில், “வட கொரியாவின் இந்த நடவடிக்கை ஆக்கப்பூர்வமானது. நியூமேனை விடுவித்தது போல கென்னத் பே என்ற மற்றொரு வீரரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in