

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாருக்கு பொறுப்பு ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதில் 2013ல் ஓரளவுக்கே இலங்கை முன்னேற்றம் காட்டியுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மனித உரிமை மீறலில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணைக்கு வற்புறுத்தவேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. போர்க் குற்ற புகார்கள் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுத்து தக்க தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை கூறினாலும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதை உலகம் கண்காணித்து வருகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்புக்கான ஆசியா பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.
போர்க்குற்றத்துக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் சுயேச்சையான சர்வதேச விசாரணை அவசியமாகும். இலங்கை அரசை விமர்சித்துப் பேசியவர்கள் அச்சுறுத்தலுக்கோ பிற இன்னல்களுக்கோ உள்ளாகியுள்ளனர். இலங்கையில் ஜனநாயக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கவேண்டும் என்றால் அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாக சர்வதேச நெருக்குதல் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிந்தது. அப்போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட தாகவும் அதுபற்றி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் இலங்கை மீது சர்வதேச அளவில் நெருக்குதல் தரப் பட்டது. இந்நிலையில், ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறிய மார்ச் தீர்மானம் மீது நடவடிக்கை எடுத்த
இலங்கை அரசு, போரில் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளின்படி, போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்று பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது. ‘இந்த நடவடிக்கைகளில் சில சாதகமானதாக இருந்தாலும், செய்த குற்றங்களுக்கு பொறுப் பேற்கும் நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகம் எழுகிறது’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.