உக்ரைனின் கிரிமியா விமான நிலையத்தை முற்றுகையிட்டது ரஷிய ராணுவம்

உக்ரைனின் கிரிமியா விமான நிலையத்தை முற்றுகையிட்டது ரஷிய ராணுவம்
Updated on
1 min read

கருங்கடல் பகுதியில் ரஷிய கடற்படைத் தளத்துக்கு அருகே உள்ள உக்ரைனின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரிமியாவின் செவஸ்டோபோல் விமான நிலையத்தை ரஷிய ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.

இதேபோல, கிரிமியாவின் தலைநகர் சிம்பரோபோலில் உள்ள விமான நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத சிலர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவலை உக்ரைன் உள்துறை அமைச்சர் அர்சென் அவகோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

"செவஸ்டோபோலில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு ரஷிய கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் தடை ஏற்படுத்தி உள்ளனர்" என அவகோவ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஷிய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதேநேரம் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரை தொடர்புகொள்ள முடியவில்லை.

வெள்ளிக்கிழமை காலை முதலே, தலைநகர் சிம்பரோபோல் விமான நிலைய வளாகத்தில் ராணுவ சீருடை அணிந்த சிலர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாக ஏஎப்பி செய்தி நிறுவன புகைப்பட கலைஞர் தெரிவித்தார். அவர்கள் செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டதாகவும், அவர்கள் யார் என்று உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிம்பர்போல் நகரில் உள்ள நாடாளு மன்றம் மற்றும் அரசு கட்டிடத்தை, முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய சிலர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்தில் ரஷிய தேசியக் கொடியை ஏற்றினர்.

கடந்த சில மாதங்களாக உக்ரைனில் உள்நாட்டு குழப்பம் நீடிக்கிறது. ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவானவர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, யானுகோவிச் நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

புதிய அரசுக்கு அமெரிக்கா ஆதரவு

இதற்கிடையே, உக்ரைன் நாடாளுமன்றம் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளது. இடைக்கால பிரதமராக அர்செனி யட்சென்யுக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா மீது ரஷியா சொந்தம் கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in