

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் டிசம்பர் 29-ம் தேதி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், அக்கட்சிகளின் தொண்டர்களை வரவிடாமல் தடுக்கும் வகையில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டது.
வங்கதேசத்தில் வரும் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை அரசியல் கட்சிகள் சாராத இடைக்கால அரசு ஒன்றின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளும் அவாமி லீக் கட்சித் தலைவரும், பிரதமருமான ஷேக் ஹசீனா ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால அரசை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் கலீதா ஜியா தலைநகர் டாக்காவில் டிசம்பர் 29-ம் தேதி பேரணி நடத்த அழைப்பு விடுத்தார். இந்த போராட்டத்துக்கு ஜமாத் – இ – இஸ்லாமி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம் வன்முறையாக மாற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், அதற்கு அரசு தடை விதித்தது. தடையை மீறி போராட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
பேரணிக்கு தொண்டர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் டாக்காவுக்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இயக்கப்படும் வாகனப் போக்குவரத்து அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்ததாகவும், போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து இரண்டு நாள்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசுக்கு ஆதரவான போக்குவரத்து சங்கங்கள் அனைத்தும் ஏற்கெனவே அறிவித்துவிட்டன. நீர்வழித் தடத்தில் இயக்கப்படும் பயணிகள் படகுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே அரசின் இந்நடவடிக்கையை அறிந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை முதலே கணிசமான எதிர்க்கட்சித் தொண்டர்கள் டாக்காவுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தங்கைல் மாவட்டத்திலிருந்து டாக்காவுக்குச் செல்ல முயன்ற ஜமாத் – இ – இஸ்லாமி தொண்டர்கள் 100 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். டாக்காவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் உள்பட 7 தலைவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுவரை நிகழ்ந்த வன்முறையில் 2 காவலர்கள் உயிரிழந்துவிட்டனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்கு சுவாதாங்காவில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் காஜி ரஹிபுத்தீன் அகமதுவின் பூர்வீக விட்டின் மீது எதிர்க்கட்சித் தொண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.