இலங்கையில் பெரும் குப்பைக் குவியல் தீப்பிடித்துச் சரிந்ததில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி

இலங்கையில் பெரும் குப்பைக் குவியல் தீப்பிடித்துச் சரிந்ததில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி
Updated on
1 min read

இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகே மாபெரும் குப்பைக் குவியல் தீப்பிடித்து வீடுகள் மீது சரிந்ததில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகியுள்ளனர்.

மீட்புக் குழுவினர் உயிருடன் இருப்பவர்களை மீட்க போராடி வருகின்றனர். தீப்பிடித்ததையடுத்து குப்பை குவியல் சரிந்ததாகக் கூறப்படுகிறது.

இது இயற்கையாக நடந்ததா அல்லது நாச வேலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரந்தெனியா பல்கலைக் கழகத்தின் 10 பேர் கொண்ட நிலவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக கொழும்ப்பு பேஜ் கூறுகிறது.

மேலும் சுரங்கம் தோண்டுதல் துறை அதிகாரிகள், நீதித்த்துறை மற்றும் மருத்துவக் குழுவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மீட்டுடமுல்லா என்ற இடத்தில் மாபெரும் குப்பை மலை தீப்பிடித்ததற்குப் பிறகு சரிந்தது இதனால் சுமார் 100 வீடுகள் முழுதும் சேதமடைய சுமார் 600 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேறினர்.

இந்த பயங்கரச் சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகியுள்ளனர், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்னும் அதிகம் பேர் உள்ளே சிக்கியிருக்கின்றனர், என்றும் ராணுவம் இடிபாடுகளில் உயிருடன் இருப்பவர்களை மீட்க போராடி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 300 அடி (91மீ) குப்பை மேடாகும் இது. அதிபர் சிறிசேனா உத்தரவுபடி நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்த துயரச் சம்பவத்திற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

“நாங்கள் இந்தக் குப்பைக் குவியலை அகற்ற அனைத்து திட்டங்களையும் ஆலோசித்து முடிவுக்கு வரும் நிலையில் இந்த துயரம் நடந்துள்ளது. அரசின் திறமையின்மைக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்றார் ரணில் விக்ரமசிங்கே.

இந்தக் குப்பைக் குவியலை அகற்றுமாறு மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

ஆனால் அருகில் இருப்பவர்கள் தங்கள் குடியிருப்பை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரிய குப்பை மலை தீப்பிடித்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்துள்ளது. புத்தாண்டை மக்கள் கொண்டாடி வந்த நிலையில் இந்தத் துயரம் ஏற்பட்டுள்ளது.

கொலொனவா பகுதியில் சுமார் 23 மில்லியன் குப்பைக் குவியல் மிகவும் மோசமான சுகாதாரப் பிரச்சினையாகும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தினமும் 800 மில்லியன் டன் குப்பைகள் இந்தக் குப்பை குவியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை அரசு வட்டாரங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in