

கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சனிக்கிழமை பேசிய தோட்டக்கலை அமைச்சரும், இலங்கையின் மனித உரிமைகள் தூதருமான சமரசிங்கே பேசியதாவது:
வரும் மார்ச் மாதம் நமக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். தேசத்துக்கும், ராணுவத்துக்கும் அரசு ஒரு போதும் துரோகம் செய்யாது. விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 30 ஆயிரம் குடிமக்களை அவர்கள் கேடயமாகப் பயன்படுத்தினர். அந்த மக்களுக்குப் பின்னால் இருந்து தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதத்தை ஒடுக்க ராணுவம் முயற்சி செய்தத ு.இருதரப்பு தாக்குதல்களுக்கு இடையே குடிமக்கள் சிக்கிக் கொண்டனர் என்பதுதான் உண்மை. ஆனால், உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் குடிமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது பொய். 40 ஆயிரம் பேர் இறந்ததாகக் கூறுவது ஐ.நா. அதிகாரி தனது புத்தகம் விற்பனை யாவதற்காகக் கூறப்பட்ட பொய் யான தகவல் என்றார் அவர்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. சர்வதேச நாடுகள் இது தொடர்பாக தொடர்ந்து இலங்கைக்கு நெருக்கடி அளித்து வருகின்றன.
இதனிடையே, இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் குழு தீர்மானம் வரும் மார்ச் மாதம் கொண்டுவரப்படவுள்ளது.
இலங்கை வடக்கு மாகாணத்தில் கடந்த 30 ஆண்டு காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை மூவர் குழு சனிக்கிழமை தொடங்கியது.
இதுதொடர்பாக மூவர் குழு செயலர் எச்.டபிள்யூ குணதாசா கூறுகையில், “இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 13,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் இது தொடர்பான விசாரணை நான்கு நாள்கள் நடைபெறும். தனிநபர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, கிளிநொச்சியில் மூன்று இடங்களில் விசாரணை நடைபெறும்” என்றார்.
இலங்கை அரசு அமைத்த போர் படிப்பினைகள் மற்றும் புனரமைப்புக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மூவர் குழு அமைக்கப்பட்டது. கடந்த 1990 முதல் 2009 ஆம் ஆண்டு வரை காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை இக்குழு சேகரிக்கும். வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானம் ஐ.நா.வில் கொண்டு வரப்படுவதை அடுத்து, இக்குழு தனது பணியைத் தொடங்கியுள்ளது.